துருக்கி நாட்டை உலுக்கிய சிறுமியின் மரணம்
11 புரட்டாசி 2024 புதன் 09:05 | பார்வைகள் : 2107
துருக்கியில் மாயமான மூன்று வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட 8 வயது சிறுமி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மசூதியில் குர்ஆன் பாடம் முடித்து வீடு திரும்பிய நிலையில் குறித்த சிறுமி காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.
உறவினர்கள், நாட்டு மக்கள், சமூக ஊடக பிரபலங்கள் என தீவிர தேடுதல் நடவடிக்கையில் களமிறங்கியது.
இதனையடுத்து அவரது குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு மைல்கள் தொலைவில் அமைந்துள்ள நதியில் இருந்து நரின் குரன் சடலமாக மீட்கப்பட்டார். மாயமானபோது அணிந்திருந்த உடைகளுடன் அவர் காணப்பட்டார்.
ஆனால் சாக்கு மூட்டை ஒன்றில், கற்களுடன் அவரது சடலமும் நதியில் வீசப்பட்டிருந்தது. ஒகஸ்டு 21ம் திகதி நண்பர்களுடன் நடந்து சென்ற நிலையிலேயே அவர் மாயமானார்.
கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளில், அவர் நண்பர்களிடம் இருந்து பிரிந்து தனியாக நடக்கத் தொடங்கிய பின்னரே மாயமாகியுள்ளார். சிறுமி மாயமான விவகாரம் ஒருசில நாட்களில் நாடு முழுவதும் தீயாக பரவியது.
பிரபலங்கள் பலர் சிறுமியை கண்டுபிடிக்க உதவுங்கள் என வலியுறுத்தினர். அத்துடன் உறவினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொலிசார், சிறப்பு குழுவினர் என சிறுமிக்காக களமிறங்கினர்.
இந்த நிலையில் ஞாயிறன்று சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்விவகார அமைச்சர் அறிவித்தார். மட்டுமின்றி, Diyarbakır பகுதி ஆளுநர் தெரிவிக்கையில், சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கற்களால் மூடப்பட்ட நிலையில் ஒரு சாக்கு மூட்டையில் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
சிறுமியை கொன்று சாக்கு மூட்டையில் கற்களுடன் கட்டி நதியில் வீசியுள்ளதாகவே பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் இதுவரை 21 பேர்கள் கைதாகியுள்ளனர். சிறுமியின் பெற்றோரும் உறவினர் ஒருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலையில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் மாமா சலீம் குரான் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
அவரது காரில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் சிறுமியின் உடையில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப்போனதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.