மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்-இலங்கை ஏ அணியை பங்களாதேஷ் ஏ அணி வெற்றி
11 புரட்டாசி 2024 புதன் 10:08 | பார்வைகள் : 1325
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற இலங்கை ஏ மற்றும் பங்களாதேஷ் ஏ மகளிர் அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் மகளிர் ஏ அணி 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.
பனாகொடை இராணுவ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த முதலாவது போட்டி மழையினால் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய வெற்றி பங்களாதேஷ் மகளிர் ஏ அணிக்கு பெரு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை மகளிர் ஏ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
முன்வரிசை வீராங்கனைகள் பிரகாசிக்கத் தவறிய நிலையில், மத்திய வரிசையில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவி சத்யா சந்தீப்பனி 36 ஓட்டங்களையம் மல்ஷா ஷெஹானி ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் பியூமி வத்சலா 22 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு சிறு தெம்பைக் கொடுத்தனர்.
சத்யா சந்தீப்பனியும் பியூமி வத்சலாவும் 5ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் இலங்கை மகளிர் ஏ அணி கௌரவமான நிலையை அடைந்தது.
பந்துவீச்சில் பஹிமா காத்துன் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரபியா கான் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
114 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 18 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பங்களதேஷ் 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது.
ஆனால், டிலாரா அக்தர் 47 ஓட்டங்களையும் முர்ஷிதா காத்துன் 30 ஓட்டங்களையும் பெற்றதுடன் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தனர்.
இருவரும் ஆட்டம் இழந்த பின்னர் (82 - 3 விக்.) ஜோடி சேர்ந்த நிகார் சுல்தானா (24 ஆ.இ.), ரிட்டு மோனி (11 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
பந்துவீச்சில் சேத்தனா விமுக்தி 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நிமேஷா மதுஷானி 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.