Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

11 புரட்டாசி 2024 புதன் 11:17 | பார்வைகள் : 871


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சடித்து விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பரீட்சை வினாத்தாள்களுக்கான வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு சமமான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், மின்னணு, அச்சிடப்பட்ட அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது தரப்பினரோ இந்த உத்தரவை மீறினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் கருத்து வௌியிட்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திரு.அமித் ஜயசுந்தர.

"எதிர்வரும் 15ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை பரீட்சை நடைபெறும். குறித்த நேரத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், அனைத்து கட்சிகளும் இந்த தேர்வுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். குறிப்பாக, குறித்த காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்