Paristamil Navigation Paristamil advert login

டாஸ்மாக்கை நடத்த ஸ்டாலினுக்கு விருப்பமில்லை

டாஸ்மாக்கை நடத்த ஸ்டாலினுக்கு விருப்பமில்லை

13 புரட்டாசி 2024 வெள்ளி 06:55 | பார்வைகள் : 563


மதுக்கடைகள் நடத்துவதில், முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பமே இல்லை; என்றாவது ஒரு நாள் அவை மூடப்படும்,'' என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

டாஸ்மாக்' நிறுவனத்தின் 4,829 கடைகளில், தினசரி 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகிறது. ஆண்டுக்கு 46,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

எனினும், மதுவால் நேரும் சமூக, பொருளாதார இழப்புகள் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் அதிகரித்தது. அதனால், போராட்டங்கள் வெடித்தன.

இதையடுத்து, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும்' என, சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., வாக்குறுதி அளித்தது.

ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 500 மதுக் கடைகள் மட்டுமே மூடப்பட்டன. கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து ஏராளமானவர்கள் மரணம் அடைந்ததை அடுத்து, மதுவிலக்கு கோரிக்கை புத்துயிர் பெற்றுள்ளது.

அந்த ஊரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. காந்தி ஜெயந்தி நாளான அக்., 2ல் நடக்க உள்ள மாநாட்டில் பங்கேற்குமாறு, அ.தி.மு.க.,வுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் வி.சி., தலைவர் திருமாவளவன். கூட்டணி கட்சியின் இந்த நடவடிக்கையால், தி.மு.க.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சர் முத்துசாமி நேற்று ஈரோட்டில் பேட்டி அளித்தார்.

'தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்; மது விலக்கு எப்போது அமல்படுத்தப்படும்?' என, நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கூறியதாவது:

டாஸ்மாக் கடைகள் நடத்துவதில், முதல்வருக்கு துளி கூட விருப்பம் கிடையாது. டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும்; முழு மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பம். என் விருப்பமும் அது தான்.

ஆனால், உடனடியாக மதுக்கடைகளை மூட முடியாது. அப்படி செய்தால், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது எல்லாருக்கும் தெரியும்.

மது குடிப்பவர்களை படிப்படியாக அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வர வேண்டும். அப்புறம் தான் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

ஆகவே, என்றாவது ஒரு நாள் டாஸ்மாக் கடைகள் நிச்சயமாக மூடப்படும்; அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம்.

வி.சி., சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதால், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அது, அவர்களுடைய கட்சியின் கொள்கை. அந்த அடிப்படையில் முடிவு எடுத்து மாநாடு நடத்துகின்றனர்.

அதை தவறு என்று சொல்ல முடியாது. மது ஒழிப்பு மாநாடு என்பது, தமிழக அரசுக்கு எதிரான மாநாடு அல்ல. மாநாட்டுக்கு அ.தி.மு.க.,வை அழைத்துள்ளனர். அதனால், கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். அப்படி எதுவும் நடக்காது.

இவ்வாறு முத்துசாமி கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்