யாகி சூறாவளி - வியட்நாமில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்
13 புரட்டாசி 2024 வெள்ளி 15:14 | பார்வைகள் : 2010
வியட்நாமில் யாகி சூறாவளியால் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளதோடு, 125 க்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளார்கள்.
இதனை அந்நாட்டு ஊடகங்கள் வியாழக்கிழமை 12 ஆம் திகதி தெரிவித்துள்ளன. இந்நிலையில் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துளள்ளன.
வியட்நாம் தலைநகர் ஹனோய்யில் சிவப்பு ஆற்றிலிருந்து வந்த நீர் சிறிது குறைந்த போதிலும் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
பல தசாப்தங்களுக்கு பின்னர் தென்கிழக்கு ஆசியாவை தாக்கிய மிக வலிமையான சூறாவளியாக யாகி சூறாவளி காணப்படுகின்றது.
இந்த சூறாவளி 149 கிலோ மீற்றர் (92 மைல்) வேகத்தில் காற்றுடன் சனிக்கிழமை கரையைக் கடந்தது.
இந்நிலையில், சூறாவளி ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்தாலும் தொடர்ந்து பெய்யும் மழையினால் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து ஆபத்தான நிலையில் உள்ளன.
கடந்த இரண்டு தசாப்தங்களில் இம்முறையே ஹனோய் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு வியட்நாமின் லாவோ காய் மாகாணத்தில் உள்ள லாங் நுவின் பகுதியில் கிராமங்கள் தீடீர் வெள்ளத்தில் மூழ்கியதால் பலர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்களை தேடும் பணிகள் நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை காலை நிலவரப்படி 53 பேர் காணமல் போயுள்ளதோடு, 8 சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 42 உயிரிழந்துள்ளதாக VNExpress தெரிவித்துள்ளது.
பெரும்பாலான உயிரிழப்புகள் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இடம் பெற்றுள்ளது.
அவற்றில் பல உயிரிழப்புகள் வியட்நாமில் லாவ் காய் பகுதியில் இருக்கும் லாங் நு கிராமத்தில் ஏற்பட்டுள்ளது.
லாவோ காய் மாகாணம் சாபாவின் பிரபலமான மலையேற்ற இடமாகவும் உள்ளது.
அங்கு திங்களன்று சூறாவளியில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த ஒரு பாலம் இடிந்து விழுந்து, அதன் மீதிருந்த பத்து கார்கள் மற்றும் இரண்டு மோட்டார்கைக்கிள்கள்,லொறிகள் சிவப்பு ஆற்றில் மூழ்கின.
அத்தோடு, மலைப்பகுதியான காவ் பாங் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 20 பேருடன் சென்ற பஸ் வெள்ளம் நிறைந்த ஓடையில் அடித்துச் செல்லப்பட்டது.
யாகி போன்ற சூறாவளிகள் காலநிலை மாற்றத்தால் வலுவடைகிறது. இதனால், புவி வெப்பமடைவதால் சூறாவளிகள் பலத்த காற்றையும், தீவிர மழையையும் கொண்டு வர வழிவகுக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.