Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதில் ரணில் ஏன் அவ்வளவு நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார்?

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதில் ரணில் ஏன் அவ்வளவு நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார்?

15 புரட்டாசி 2024 ஞாயிறு 14:20 | பார்வைகள் : 1056


இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை ( செப்டெம்பர் 21) நடைபெறவிருக்கிறது. 38 வேட்பாளர்களில் மூன்று பேரே பிரதான வேட்பாளர்களாக கருதப்படுகிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோரே அவர்கள். மற்றைய வேட்பாளர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தமிழ் பொதுவேட்பாளர் என்று வர்ணிக்கப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் மற்றும் பல ஊடக  நிறுவனங்களின் உரிமையாளரான திலித் ஜயவீர ஆகிய மூவரும் கணிசமான வாக்குகளைப் பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்கவை கடந்தவார முற்பகுதியில் ' டெயிலி ஃபைனான்சியல் ரைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் நிஸ்தார் காசிம் பேட்டி கண்டார். அந்த பிரத்தியேக பேட்டி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இரு கேள்விகளுடன் ஆரம்பித்தது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேர்தல் பிரசாரங்களில் நீங்கள் கண்டது என்ன? கேட்டது என்ன? உங்களுக்கு ஆச்சரியத்தை தந்தது எது? என்பதே முதலாவது கேள்வி.

ரணிலின் பதில் பின்வருமாறு அமைந்தது; 

தேர்தல் இன்னமும் பரந்து திறந்ததாகவே இருக்கிறது. மக்கள் கவனமாக கேட்கிறார்கள். எதிர்காலத்துக்கான தங்களது தெரிவுகள் குறித்து பரிசீலிக்கிறார்கள். நான் மாத்திரமே ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரம், பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டம், சமூகநீதி ஆணைக்குழு, பாராளுமன்ற தராதரங்கள், பிரயசெத் டெப் ஆணைக்குழுவின 87 விதப்புரைகளை நடைமுறைப்படுத்துதல், விவசாயத்தை நவீனமயமாக்கல் மற்றும் பல விடயங்களை  மேம்படுத்தும் புதுமையான யோசனைகளை முன்வைத்திருக்கிறேன். மற்றவர்கள் எவரும் அதற்கு இணையான யோசனைகளை முன்வைக்கவில்லை. அந்த விவகாரங்களை கையாளவுமில்லை. அவர்களது யோசனைகள் தற்போதிருக்கும் நிலைவரத்தை தொடர்ந்து பேணுவது அல்லது முகத்தை மாற்றுவதாகவே இருக்கிறது.

ஒரு மாதத்துக்கு முந்திய நிலைவரத்துடன் ஒப்பிடும்போது தேர்தலில் வெற்றிபெறும் உங்கள் வாய்ப்பு எவ்வளவு வலுவானதாக மாறியிருக்கிறது என்பது இரண்டாவது கேள்வி.

"அதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனது முழு தந்திரோபாயமுமே நியமனப்பத்திரம் தாக்கலுக்கு பின்னர் பிரசாரச்  செயற்பாடுகளை தீவிரப்படுத்துவதாக இருந்ததே தவிர அதற்கு முந்தியதாக இருக்கவில்லை. மற்றையவர்கள் முன்கூட்டியே ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் தங்களது பிரசாரத்தை இரு தடவைகள் செய்தார்கள். ஆனால் இன்னமும் மக்கள் முன்னால் புதிதாக எதையும் முன்வைக்கவில்லை" என்பதே அந்த கேள்விக்கான ரணிலின் பதிலாக இருந்தது.

இந்த இரு பிரத்தியேகமான கேள்விகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அளித்திருக்கும் பதில்கள்  தேர்தல் தீர்ப்பு இன்னமும் திறந்ததாகவே இருக்கிறது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை தனது வெற்றியில் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் என்று தெரிகிறது என்பதை சுட்டிக்காட்டின.

தனது பிரசாரங்களின் போது ரணில் பரபரப்பு இல்லாத நம்பிக்கையை வௌாக்காட்டிவருகிறார் என்பதை ' ஃபைனான்சியல் ரைம்ஸுக்கு ' அவர் அளித்த பேட்டி தெளிவாகக் காட்டுகிறது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ரணிலின்  கூட்டங்களில் கலந்துகொள்கின்ற மக்கள் அவர் வெளிப்படுத்துகின்ற நட்புரிமையானால் கவரப்பட்டவர்களாக இருக்கிறார்கள். சர்வசாதாரணமாக எளிதாகவும் சுறுசுறுப்பாகவும் அவர் மக்களுடன் பழகுகின்ற முறை றோயல் -- தோமியன் கிரிக்கெட் போட்டியின்போது முஸ்ராங்ஸ் கூடாரத்திற்குள் காணப்படும் மனிதரை நினைவுபடுத்துகிறது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஜனாதிபதி வகித்த பாத்திரத்துக்கு தனது நன்றியை வெளிப்படுத்த கிளிநொச்சியில் முன்பின் தெரியாத ஒரு தமிழ்ப் பெண்மணி அவருக்கு தொப்பியொன்றை அன்பளிப்புச் செய்தார். தம்பதெனியவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் அந்த தொப்பியை விக்கிரமசிங்க மகிழ்ச்சியுடன்  அணிந்துகொண்டதன் மூலம்  அதன் மீது மக்களின் கவனத்தை ஈர்த்தார்.அநுரா குமார திசாநாயக்கவை தனது நண்பர் என்று ரணில் வேண்டுமென்றே குறிப்பிடுகிறார். ஆதரவாளர்கள் கூச்சலிடும்போது அவர்களைப் பார்த்து " கூச்சல் போடவேண்டாம். அவர் எனது நண்பர் " என்று ஜனாதிபதி  விளையாட்டாக  கேட்கிறார்.

உற்சாகமான ஒரு அசட்டைப்போக்கு ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் தற்போதைய பின்புலத்தில் இரு காரணங்களின் விளைவாக மாத்திரமே வெளிக்கிளம்ப முடியும். முதலாவது இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியில் தானே வெற்றியாளர் என்று உச்சஅளவில் அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார். இரண்டாவது உளரீதியாகவும் உணர்வுரீதியாகவும் அவர் இறுதி முடிவில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். " பகவத்கீதையில் " கூறப்பட்டதைப் போன்று பயன்கள் நேர்மறையாக இருந்தாலென்ன எதிர்மறையாக இருந்தாலென்ன அவற்றை எதிர்பார்க்காமல் தனது கடமை என்று கருதுவதை விக்கிரமசிங்க செய்துமுடிக்கிறார்.

அரசியல் சூழ்நிலை

 ரணில் விக்கிரமசிங்கவின் பரபரப்பு இல்லாத நம்பிக்கை, தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக பலருக்கு பெரிய புதிராக இருக்கிறது. வாகனங்களில் கொண்டுவந்து இறக்கப்படும் மக்கள் கூட்டம், பெருவாரியான  சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், ஊடக விளம்பரங்கள்  மற்றும் தீவீரமான சமூக ஊடகப் பிரசாரங்கள் காரணமாக அநுரா குமார திசாநாயக்கவும் சஜித் பிரேமதாசவுமே முன்னரங்க போட்டியாளர்கள் என்ற கருதப்படுவதாக  ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இணையமும் யூரியூப்பும் நிறைந்த இந்த நவீன உலகில் அரசியல் அறிஞர்கள் ரணிலை மூன்றாம் இடத்துக்கு தள்ளிவிட்டார்கள். ஆனால் இந்த பிரசங்கங்களை எல்லாம் ரணிலின் நம்பிக்கை முனைப்பாக மறுதலித்து நிற்கிறது.

தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பின்புலத்தில் அநுரா குமார தாசாநாயக்கவின் பிரசாரச் சுலோகம் நாடு அநுராவினுடையது என்பதாகவே இருக்கிறது. பிரேமதாசவின் சுலோகம் அவரே வெற்றியாளர் என்பதாக இருக்கிறது. ஆனால் இவற்றுக்கு முற்றிலும் மாறாக ரணில்  விக்கிரமசிங்கவின் பிரசாரச் சுலோகம் " புளுவான் ஸ்ரீலங்கா/ இயலும் ஸ்ரீலங்கா " என்பதாக இருக்கிறது. நாடு தன்னுடையது என்று அநுராவும் தானே வெற்றியாளர் என்று பிரேமதாசவும் உரிமை கோரிக்கொண்டிருக்கும் அதேவேளை தனக்கு மேலாக நாட்டை முன்வைக்கும் ரணில் இலங்கையினால் முடியும் என்று கூறுகிறார். அதனால் தானே வெற்றிபெறுவார் என்ற ரணிலின் நம்பிக்கையின் அடிப்படை என்ன?  இலங்கை மக்கள் மீது அவர் தங்கியிருப்பதும் அவர்கள் சரியானதைச் செய்வார்கள் என்று அவருக்கு இருக்கும் நம்பிக்கையுமே அந்த அடிப்படையாகும்.

கடந்த காலத்தில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலும்   ஆதிக்கம் செலுத்திய ஒரு தொனிப்பொருளைக் கொண்டருந்தது. 1994 ஆம் ஆண்டில் சமாதானத்தையும் மாற்றத்தையும் கொண்டுவருவதாக உறுதியளித்து சந்திரிகா வெற்றிபெற்றார் ; விடுதலை புலிகளை போரில் தோற்கடித்த பலத்தில் மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டில் வெற்றிபெற்றார். 2015 ஆம் ஆண்டில் ராஜபக்ச குடும்பத்துக்கு ஒரு மாற்றாக மைத்திரிபால சிறிசேன வந்தார். கோட்டாபய ராஜபக்ச 2019 ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு மீதான அக்கறைகள் மற்றும் சிறுபான்மைச்  சமூகங்களுக்கு எதிரான உணர்வுகள் காரணமாக கோட்டாபய வெற்றி பெற்றார்.

பொருளாதார அபத்தம் 

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் வெற்றி பெற்ற 1992 ஜனாதிபதி தேர்தலில் அவரது சுலோகம்  " பொருளாதார அபத்தம் " ( the economy stupid ) என்பதாக இருந்தது. கிளின்டனின் பிரசாரக்குழுவின் ஒரு மதியூகியான ஜிம் கார்வைல் என்பவரே அந்த சுலோகத்தை புனைந்து கொடுத்தார். தொலைக்காட்சி களில்  பரவலாக ஔிபரப்பப்பட்டு அது அமெரிக்க வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது. பில் கிளின்டன் வெற்றி பெற்றார்.

"இது பொருளாதார அபத்தம் " ( It's economic stupid ) என்பது தற்போதைய இலங்கை ஜனாதிபதி தேர்தலிலும் தொனிப்பொருளாக அமைந்தால் நன்றாக இருந்திருக்கலாம்  இந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் தொனிப்பொருள் பொருளாதாரமாகும். ஆனால், அது அவ்வாறில்லை என்று மக்களை நம்பவைத்து வேறு பிரச்சினைகள் மீது அவர்களின் கவனத்தை திருப்புவதற்கு சஜித் பிரேமதாசவினதும் அநுரா குமார திசாநாயக்கவினதும் பிரசார விற்பன்னர்கள் முயற்சிக்கிறார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியும் எதிர்கால இலங்கையின் பொருளாதார வாய்ப்பக்களுமே நாட்டின் முக்கியமான அக்கறைக்குரிய விடயங்கள் என்பதே உண்மையாகும்.

பொருளாதாரமும் அதன் புத்தெழுச்சி அல்லது மறுமலர்ச்சியுமே ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கும் வலிமையான விடயங்களாக  இருக்கின்றன. அதுவே அவர் மக்கள் முன்கொண்டுசென்று ஆதரவைப் பெறும் ஒப்பற்ற செய்தியாகவும் விளங்குகிறது. ராஜபக்ச ஆட்சியின்போது  2022 ஆம் ஆண்டில் இலங்கை மக்கள் படுமோசமான பொருளாதார நெருக்கடியை அனுபவித்தார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு  கடுமையான தட்டுப்பாடு நிலவியது.  பொருளாதாரச் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க அந்நிய செலாவணி இருக்கவில்லை.

 அதன் விளைவாக அறகலய என்று அறியப்பட்ட மாபெரும் மக்கள் போராட்ட இயக்கம் தோன்றியது. அரசியல் நோக்கம் கொண்ட சக்திகள் அறகலயவை சாட்டாகப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு அவர்களின் வீடுகளையும் வாகனங்களையும் தீயில் பொசுக்கின. ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, பாராளுமன்றம், உயர்நீதிமன்றம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் அலுவலகம் ஆகியவற்றை  முற்றுகையிட்டு கைப்பற்றுவதற்கு இரு தீய திட்டம் இருந்தது.

அத்தகைய  மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையிலேயே  முதலில் பிரதமராகவும் பிறகு ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியதிகாரத்தைப் பொறுப்பேற்றார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஜே.வி.பி. தலைவர் திசாநாயக்க ஆகியோர் கோழைத்தனம் அல்லது இயலாமை காரணமாக  ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு மறுத்த பின்னர் மாத்திரமே விக்கிரமசிங்க தலையிட்டார்.

ரணிலின்  பதவியேற்பதை தடுக்கும் ஒரு முயற்சியாக அவரது வீடு பெறுமதியான பெருமளவு நூல்கள், தொல்பழமைவாய்ந்த பொருட்கள் மற்றும் ஓவியங்களுடன் சேர்த்து எரிக்கப்பட்டது. ஆனால், மனத்திடமில்லாத ஒரு " மிஸ்டர் பீன் " என்று அவரது எதிரிகளால் நீண்டகாலமாக உருவகப்படுத்தப்பட்ட மனிதர் இராணுவப் பின்னணியைக் கொண்ட ஜனாதிபதி கோட்டாவையும் விட நெஞ்சுரம் கொண்ட " வலிமையானர்  "  தான்  என்பதை நிரூபித்தார்.

ரணில் நெருக்குதலின் கீழ் துவண்டு போகவில்லை. அவர்  நம்பிக்கை இழந்து போயிருந்த இராணுவத்துக்கும் மனத்தைரியத்தைக் கொடுத்து சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிருப்தியாளர்கள் மற்றும் சிறிய கட்சிகளைச் சேர்ந்த வேறு சிலரினதும் உதவியுடன் அரசாங்கத்தைச் செயற்படவைத்தார். சர்வதேச சமூகத்தினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் ஆதரவு பெறப்பட்டது. மத்திய வங்கியுடன் சேர்ந்து பொருளாதார மீட்சித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. படிப்படியாக வழமைநிலை ஏற்படுத்தப்பட்டது.  பஞ்சம்,  பட்டினிச்சாவு  அபாயம்  தடுக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்துடன் முழுமையாக ஒத்துழைத்ததன் மூலம் விக்கிரமசிங்க அரசாங்கம் பெரிதும் தேவைப்பட்ட பொருளாதார நிவாரணத்தைக் கொண்டுவந்தது.கடைப்பிடிக்கப்பட்ட  சில அணுகுமுறைகள் மக்களில் பல பிரிவினரை குறிப்பாக சமூகத்தில் பின்தங்கிய மற்றும் நலிவுற்ற பிரிவினரை கடுமையாகப் பாதித்தது. ரூபாவின் பெறுமதி பலப்படுத்தப்பட்டது. பணவீக்கம் குறைக்கப்பட்டது.

வரி அறவீட்டுத்தளம் விஸ்தரிக்கப்பட்டது. கடன் மறுசீரமைப்புத் திட்டம்  நடைமுறைப் படுத்தப்பட்டது. கோட்டாபயவின் " பசளைப் புரட்சியினால் " நிர்மூலம் செய்யப்பட்ட விவிசாயம்  மீட்டெடுக்கப்பட்டது. வெளிநாடுகளில் வேலைசெய்யும் இலக்கையர்களின் அனுப்பீடுகள் அதிகரித்தன.  சுற்றுலாப் பயணிகளின் வருகை  தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாடும் கிடைக்கக்கூடியதாக இருந்த பொருட்களை  வாங்குவதற்கு மக்களுக்கு கட்டுப்படியாகாமல் இருந்தமையுமே முன்னர் பிரச்சினையாக இருந்தது. இப்போது பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் உயர்ந்த விலைக்கு அவற்றை வாங்குவதற்கு பலரால் முடியாமல் இருக்கிறது. பொருளாதாரச் சுமையை தணிப்பதற்கு உதவுமுகமாக விக்கிரமசிங்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது.

ஓய்வூதியம் உட்பட அரசாங்க சேவையில் உள்ளவர்களின்  சம்பளங்கள் அதிகரிக்கப் பட்டிருக்கின்றன. " அஸ்வேசும " திட்டம் வறிய குடும்பங்கள் அவற்றின் அளவையும் தேவையையும் பொறுத்து 5 ஆயிரம் ரூபா தொடக்கம் 17 ஆயிரம் ரூபா வரை மாதாந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு வசதி செய்திருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் தினச்சம்பளம் ஆயிரம் ரூபாவில் இருந்து 1,350 ரூபாவாக அதிகரிக்கப் பட்டிருக்கிறது. தோட்ட முகாமைத்துவக் கம்பனிகள் இணங்கினால் உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவாக மேலும் 350  ரூபா கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. "  உறுமய " திட்டத்தின் கீழ் காணிகளும் வீடுகளும் தொடர்மாடி குடியிருப்புகளும் மக்களுக்கு சொந்தமாக வழங்கப்படுகிறது.

தெளிவாகத் தெரிகின்ற இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்ற போதிலும், ரணிலும்  அவரது சகாக்களும் அறிவுத்திறன் வாய்ந்த இலங்கை மக்களும் நாட்டுக்கு இப்போது கிடைத்திருப்பது ஒரு இடைக்கால ஓய்வு மாத்திரமே என்பதை நன்கு அறிவார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு நாடு இன்னமும் நீண்டதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. கடன்களை திருப்பிச் செலுத்துவது 2028 ஆம் ஆண்டுவரை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதால் அடுத்த நான்கு வருடக்களுக்கு கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய தேவையில்லை. கடன்களை திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது பிரச்சினை மீண்டும் தோன்றும்.

உறுதிப்பாடு - தொடர்ச்சி  - வளர்ச்சி 

அதனால்  அடுத்த சில வருடங்களில் பொருளாதாரத்தை மே்படுத்துவதற்கும் விரவுபடுத்துவதற்கும் பேரளவு முயற்சியொன்றே ஆகும். கடந்த இரு வருடங்களும் பொருளாதார உறுதிப்பாட்டைக் கொண்டுவந்த ஒரு காலப்பகுதியாக இருந்தது. அடுத்த நான்கு வருடங்களும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிப்பதற்கான ஒரு காலப்பகுதியாக இருக்கவேண்டும். அதனால் 2024 ஜனாதிபதி தேர்தல் தொடர்ச்சியை உறுதிப்  படுத்துவதற்கான  அடுத்த ஆட்சியின் தொடக்கத்துக்கு முன்னரான ஒரு இடைக்காலமாகும். பொருளாதார உறுதிப்படுத்தல் கட்டத்தில் இருந்து பொருளாதார வளர்ச்சிக் கட்டத்துக்கான நகர்வை மேற்பார்வை செய்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவை விட சிறந்தவர் யார்? 

தன்னால் இதைச் செய்யமுடியும் என்பது ரணிலுக்கு தெரியும்.  இன்று இலங்கையில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் மத்தியில் அதைச் செய்வதற்கு சிறந்த ஆள் தானே என்று அவர் நினைக்கிறார். அவ்வாறு அவர் நினைப்பது தவறு அல்ல. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தலைமைதாங்கி வழிநடத்தியதைப் போன்று பொருளாதார மறுமலர்ச்சியை முன்னெடுப்பதற்கு பொருத்தமான - சிறந்த ஆற்றல்களை தன்னகத்தே கொண்ட அரசியல் தலைவர் ரணிலேயாவார். 

நாட்டுக்கு தலைமை தாங்கி வழிநடத்தி அதன் பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு இன்னொரு ஜனாதிபதி பதவிக்காலத்தை அவர் விரும்புகிறார். அவரின் தேர்தல் பிரசாரத்தின் அடிநாதமாக விளங்குவது இதுவேயாகும். ரணிலுக்கு இப்போது 75 வயது. இன்னும் ஐந்து வருடங்களில் அவருக்கு 80  வயதாகிவிடும்.  அதனால் அவர் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் இதுவே அவரது கடைசிப் பதவிக்காலமாக  இருக்கக்கூடும்.

அதன் காரணத்தினால்தான் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்கு இன்னொரு தனிப்பட்ட காரணமும் இருக்கிறது. ரணில் ஒருபோதும் இலங்கை மக்களினால் நேரடியாக  தெரிவு செய்யப்பட்டதில்லை. 2022 ஜூலையில் அவர் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினாகளினாலேயே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். எனவே அவர் ஜனாதிபதியாக மக்களினால் தெரிவு செய்யப்படுவதற்கான இறுதி வாய்ப்பு இதுவாகவே இருக்கக்கூடியது சாத்தியம்.

உண்மையைக் கூறுதல் 

பொய் வாக்குறுதிகளை வழங்காமல் மக்களுக்கு வெளிப்படையாக உண்மையைக் கூறுவது ரணிலின் நேர்மறையான   பழக்கங்களில் ஒன்றாகும். அவர் தான்  போகின்ற ஒவ்வொரு நகரத்திலும் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கப் போவதாகவோ அல்லது அமெரிக்காவில் உள்ள நகரங்களிடமிருந்து உதவியைப் பெற்று பாடசாலைகளை தரமுயர்த்தப் போவதாகவோ உறுதியளிப்பதில்லை. குடும்பங்களுக்கு மாதாந்தம் பண ஒதுக்கீடுகளை வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிக்கப்போவதாக அவர் கூறுவதில்லை.

வரிகளை இல்லாமல் ஒழிக்கப்போவதாகவோ அல்லது சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு திருத்தங்களைக் கொண்டு வரப்போவதாகவோ ரணில் கூறுவதில்லை. பதிலாக, நாட்டின் பொருளாதாரத்தின் மெய்யான நியையைப் பற்றி உண்மையைக் கூறி தான் செய்திருப்பவற்றையும் எதிர்காலத்தில் செய்வதற்கு எதிர்பார்த்திருப் பவற்றையும் விளக்கியிருக்கிறார்.

இந்த நேர்மையான வெளிப்படைத்தன்மை அண்மைய மாதங்களில் அவருக்கும் நாட்டுக்கும் நன்கு பயன் தந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. குழப்பம் விளைவிப்பவர்களும் சதிச்செயல்களில் ஈடுபடுபவர்களும் அரசாங்கத்துக்கு எதிராக இரண்டாவது " அறகலயவை " தூண்டிவிடுவதற்கு கடுமையாக முயற்சிளைச்  செய்த போதிலும், அவை தோல்வியையே தழுவியது. அத்தகைய முயற்சிகள் மக்கள் மத்தியில் பெருமளவுக்கு எடுபடுவதில்லை. 

இன்றைய நிலையில் எது முக்கியமானது என்பது மக்களுக்கு தெரியும் என்பதுடன்  விக்கிரமசிங்க எதற்கு எதிராக நிற்கிறார் என்பதை அவர்கள் விளங்கிக்  கொள்கிறார்கள். அதேபோன்று, இன்றைய  நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டு்க்கு தலைமை தாங்குவதற்கு சிறந்த தலைவர் ரணில்தான் என்பதை உணர்ந்து  விளங்கிக் கொள்வதால்  மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரிக்கக்கூடியது சாத்தியம்.

விக்கிரமசிங்கவின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் ஒரு உள்நோக்கைக் கொண்ட பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்தவர்களுடன் பேசியபோது அவர் தான் செய்தவற்றை மக்கள் மெச்சுகிறார்கள் என்று உண்மையில் நம்புவதுடன் பொருளாதார ரீதியில் இலங்கையை மேம்படுத்துவதற்கான தனது பணியைத் தொடருவதற்கு தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார் என்ற  எண்ணமே எனக்கு ஏற்பட்டது.

தற்போது அடையப்பட்டிருக்கும் உறுதிப்பாட்டை வளர்ச்சியாக மாற்ற வேண்டும் என்பது முக்கியமானது. இதை வேறு விதமாகச் சொல்வதானால் இந்த கட்டத்தில் முன்னடுக்கப்பட்ட  கொள்கைகள் எந்தவிதமான குழப்பம் அல்லது திரிபுபடுத்தல் இன்றி அடுத்த கட்டத்தில் நடைமுறைப்படுத்தல் மட்டத்தை எட்டவேண்டும்.

இதைச் சாதிக்கக்கூடிய நபர் தானே என்பது ரணிலின் அபிப்பிராயம்.  அவரது பிரதான போட்டியாளர்களான பிரேமதாசவும் திசாநாயக்கவும் சவால்மிக்க பணிக்கு முகங்கொடுப்பதற்கான ஆற்றலைக் கொண்டவர்கள் அல்ல. வாக்குகளைப் பெறும் நோக்கத்திற்காக அவர்கள் செய்கின்ற அறிவிப்புகளும்  அள்ளிவீசும் வாக்குறுதிகளும் பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுப்பதில்  சம்பந்தப்பட்டிருக்கும்  கடுஞ்சிக்கல்களை அவர்கள்  விளக்கிக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றன.

இலங்கை மக்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு சிறந்த ஆள் தானே என்ற நம்பிக்கையில் தனக்கு வாக்களிப்பார்கள் என்று ரணில் நம்பிக்கை கொண்டுள்ளார். வடக்கு, கிழக்கு உட்பட தபால் மூல வாக்குகளில் பெருமளவானவை தனக்கே அளிக்கப்பட்டிருப்பதாக கிடைத்த " உத்தியோகபூர்வமற்ற"ாசெய்திகளை  அடுத்து அவர் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

ஜே.வி.பி. - தேசிய மக்கள் சக்தி அச்சக் காரணி 

 அச்சக் காரணி ஒன்றும் இருக்கிறது. ஜனதா விமுக்தி பெரமுன (  ஜே.வி.பி. )  முன்னரைப் போலன்றி வேறுபட்ட ஒரு கட்சியாக மக்களை நம்பவைப்பதற்கு அதன் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அவதாரத்தில் அரசியல் தோற்றத்தில் முற்று முழுதான மாற்றம் ஒனறைச் செய்திருக்கிறது. உண்மையில் இந்த மாற்றத்தை புலம்பெயர் சிங்கள சமூகத்தில் உள்ள சில பிரிவினர் உட்பட பெருமளவு மக்கள் நம்புகிறார்கள். அநுரா குமார திசாநாயக்க தன்னை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு " மிதவாதியாக்" காட்டுவதற்கு கடுமையாக பிரயத்தனம் செய்திருக்கிறார். கலாநிதி ஹரினி அமரசூரிய போன்றவர்கள் தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் ஆர்வத்தையும் ஆதரவையும் மேம்படுத்துகிறார்கள்.

அவ்வாறு இருந்தாலும், லால் காந்த, சுனில் ஹந்துனெத்தி போன்றவர்களின் பேச்சுக்கள் மக்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. சமூக ஊடகத்தளங்களில் சில ஜே.வி.பி. ஆதரவுச் சக்திகளின் அச்சமூட்டும் தன்மையான நடத்தைகள் அந்த கவலையை மேலும் அதிகரிக்கின்றன. வரலாற்றை அறியாத புதிய தலைமுறை ஒன்று ஜே.வி.பி. க்கு ஆதரவாக திரண்டிருக்கக்கூடும். ஆனால் ஒப்பீட்டளவில் பழைய தலைமுறைகள் மத்தியில் 1971 மற்றும் 1987 -- 89 காலப் பகுதிகளின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன.

இந்த அச்சங்களுக்கு மேலதிகமாக,  அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதியாக வந்தால் எதைச் செய்யக்கூடும் அல்லது எதைச் செய்யாமல்விடக்கூடும் என்பதைப் பற்றிய சந்தேகங்களும் ஏக்கங்களும் இருக்கின்றன.இது சஜித்துக்கும் பொருந்தும். இருவருமே சோதித்துப்பார்க்கப் படாதவர்கள். அவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதைப் பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். தற்போதைய பொருளாதார நிலைவரம் மேலும் மோசமடையக் கூடாது என்பதே மக்களில் பலரின் பிரதான அக்றையாக இருக்கிறது. நிலைவரம் மேம்படாவிட்டாலும் கூட மோசமடைந்து விடக்கூடாது. கோட்டாபயவின் ஆட்சியின்போது மக்களுக்கு நேர்ந்த அவலம் பயங்கரமானது. அது மீண்டும் நேர்ந்துவிடக்கூடாது. " இந்த நிலைவரம் மோசமடைந்துவிடாமல் தொடரவேண்டும் என்பதே எங்கள் எல்லோரினதும்  விருப்பம் " என்றே யூரியூப் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த பல சாதாரண மக்கள் திரும்பத் திரும்பக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

ரணிலின் கடந்த காலம்

மீண்டும் இந்த இடத்தில் ரணில் விக்கிரமசிங்க தனது போட்டியாளர்களை விடவும் மேம்பட்டவராகவே காணப்படுகிறார். சஜித்தையோ அல்லது அநுரா குமாரவையோ போலன்றி ரணில் இரு வருடங்களாக ஜனாதிபதி பதவியில் இருந்து வருகிறார். பொருளாதார ரீதியில் இலங்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கி வழிநடத்திய நிரூபிக்கப்பட்ட ஒரு கடந்த காலம் அவருக்கு இருக்கிறது. மறுபுறத்தில்   சஜித்தும் அநுரா குமாரவும் நெருக்கடியான ஒரு நேரத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதை தவிர்த்த அல்லது அதிலிருந்து நழுவிய பேர்வழகள்.சிங்கம் வேட்டையாடி வீழ்த்திய இரையை வட்டமிடும் கழுதைப்புலி எனப்படும் ஒருவகை காட்டு விலங்குகளைப் போன்று அவர்கள் இருவரும் பதுங்கித் திரிகிறார்கள். ரணில் செயலில் காட்டுபவராக விளங்கும் அதேவேளை சஜித்தும் அநுரா குமாரவும் கதையளப்பவர்களாக உள்ளனர்.

கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் குளிரூட்டப்பட்ட அறைகளில் சாய்மனைக் கதிரைகளில் அமர்ந்திருந்துகொண்டு விவகாரங்களை ஆராய்பவர்களை விடவும் வேறுபட்ட பண்புகளைக் கொண்டவர்களாக கிராமங்களையும் நடுத்தர நகரங்களையும் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். 

கிராமம்புற மக்கள் கடுமையான நன்றியுணர்வைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்  தங்களது பிரச்சினைகளை தணிப்பதற்கு பாராட்டத்தக்க தலைமைத்துவத்தை வழங்கியதற்காக ரணிலுக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள். இந்த விடயத்தில் ரணில் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் இருந்த நிலைவரத்தையும் பின்னர் இருக்கும் நிலைலரத்தையும் ஒப்பிட்டுப்பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சமூகத்தின் அடிமட்டங்களில் இருந்து தொடர்ச்சியாக வந்த நெருக்குதல்களே பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்சாக்களுக்கு எதிராக திரும்பி ரணிலை ஆதரிக்க முன்வந்ததற்கு  காரணம் என்று கூறப்படுகிறது.

"மௌனமாக இருக்கும் பெரும்பான்மையான மக்கள் உறுதியாக ரணிலை ஆதரிக்கிறார்கள் என்று அவரின் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். " ரணிலுக்கு வாக்களிக்கப் போகிறவர்கள் தாங்கள் அவருக்கு வாக்களிக்கப்போவதாக கூரை முகட்டில் இருந்து கூச்சல் போடுகிறவர்கள் அல்ல.  அவர்கள் 21 ஆம் திகதி அமைதியாக வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று எரிவாயு சிலிண்டர் சின்னத்துக்கு நேரே தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்வார்கள்" என்று அவர் கூறினார்.

தேர்தல் தினத்தன்று இலங்கை மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். அவர்கள் சிலிண்டருக்கு பெரும் எண்ணிக்கையில் வாக்களிப்பார்களா? அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். காரணம் அவர்கள் தனக்கு மாத்திரம் வாக்களிக்கப்  போவதில்லை, தங்களது சொந்த  நல்வாழ்வுக்காகவும் இலங்கையின் எதிர்காலத்துக்காகவும் வாக்களிக்கப்போகிறார்கள் என்று அவர் நம்புகிறார். 

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்