பதவியை இன்று உதறுகிறார் கெஜ்ரிவால்!
17 புரட்டாசி 2024 செவ்வாய் 03:02 | பார்வைகள் : 1728
மதுபான ஊழல் வழக்கில், ஜாமினில் வெளியே வந்துள்ள கெஜ்ரிவாலுக்கு, முதல்வர் அலுவலகத்திற்கு போக கூடாது. பைல்களில் கையெழுத்து போடக் கூடாது என பல்வேறு உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. பயனற்றதாகி விட்ட முதல்வர் பதவியை, கெஜ்ரிவால் இன்று (செப்டம்பர் 17) ராஜினாமா செய்ய உள்ளார்.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மதுபான கொள்கை முடிவு செய்ததில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்தனர். இந்த வழக்கில் ஆறு மாதங்கள் சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் அளித்தது. ஜாமின் கொடுத்தாலும் முதல்வர் பதவியை வைத்து அவர் ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு உச்ச நீதிமன்றம் எண்ணற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
உத்தரவுகள்!
முதல்வர் அலுவலகத்தின் உள்ளே செல்ல கூடாது. பைல்களில் கையெழுத்து போடக் கூடாது. பொது இடங்களில் மதுபான ஊழல் வழக்கு குறித்து பேச கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவியை கெஜ்ரிவால் தனக்கு சாதகமாக உபயோகப்படுத்த முடியாத அளவு உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் முதல்வர் பதவியை வைத்திருந்து ஒன்றும் செய்ய முடியாது என்பதை கெஜ்ரிவால் உணர்ந்து ராஜினாமா முடிவெடுத்துள்ளார்.
சிறையில் இருந்தபோதெல்லாம் 'முதல்வர் பதவியே பாதுகாப்பு' என்று கருதி, கெஜ்ரிவால் ராஜினாமா செய்யாமல் இருந்தார். இப்போது ஜாமினில் வந்த பிறகு, 'பதவி இருந்தும் பயனில்லை' என்ற நிலையில் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
இன்று ராஜினாமா!
இரு தினங்களுக்கு முன்பு, கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், 'முதல்வர் பதவியை இரு நாட்களில் ராஜினாமா செய்வேன். மக்கள் நேர்மையானவன் எனக் கருதி மீண்டும் வெற்றி பெற செய்தால் மட்டுமே, முதல்வராவேன் என, சபதமிட்டார். இந்நிலையில், இன்று (செப்.,17) மாலை 4:30க்கு டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவை கெஜ்ரிவால் சந்திக்கிறார். அப்போது, ராஜினாமா கடிதத்தை அவர் வழங்க உள்ளார்.
அடுத்த முதல்வர் யார்?
இன்று காலை நடக்கும் கூட்டத்தில், புதிய முதல்வரை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தேர்ந்தெடுக்கின்றனர். முதல்வர் போட்டியில், அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட் உள்ளிட்டோர் இருப்பதாகக் கூறப்படுகிறது. கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவும் இந்த போட்டியில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.