பனாமா கால்வாய்க்கு அஸ்திவாரம் போட்ட பிரான்ஸ்..!! (குறுந்தொடர்.. 02)
16 சித்திரை 2021 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19790
ஆக இந்த பனாமா நாட்டில் ஒரு கால்வாய் அமைத்தால் இத்தனை பிரச்சனைக்கும் முடிவு கிடைக்கும் என நம்பப்பட்டது.
1530 ஆம் ஆண்டிலேயே ஸ்பெயின் நாட்டை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு இந்த 'ஐடியா' தோன்றியிருந்தது. ஆனால் நாட்டின் குறுக்கே கால்வாய் வெட்டுவது பொருளாதார அடிப்படையில் சாத்தியம் இல்லை என முடிவெடித்து திட்டத்தை கைவிட்டது ஸ்பெயின்.
ஆனால் அந்த கால்வாய் 'ஐடியா' அனைத்து நாடுகளுக்கும் பிடித்துப்போக, 'யாராவது வெட்டிக் கட்டுங்கப்பா' என அறிக்கை விட்டுக்கொண்டிருந்தன.
பனாமா நாட்டிடம் கேட்டால், 'கையில் பத்துப் பைசா இல்லை. ஆளை விடுங்கள்!' என அமைதியாக இருந்தது.
இறுதியாக 1881 ஆம் ஆண்டு, 'சரி.. நாங்களே களத்தில் இறங்குகின்றோம்!' என முன்வந்தது பிரான்ஸ்.
ஏன் இதில் பிரான்ஸ் தலையிட்டது..? ஏனென்றால் இந்த கடல் போக்குவரத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்சும் ஒன்று.
ஐரோப்பாவில் அசுர வளர்ச்சியில் இருந்த பிரான்ஸ், பல மில்லியன் பிராங்குகளை கொட்டி இந்த கால்வாயை அமைக்க திட்டம் தீட்டியது.
பனாமா நாட்டில், காடன் ஏரியை மையமாக கொண்டு இந்த செயற்கை ஏரியை அமைக்க திட்டம் தீட்டினார்கள். ஆனால் அங்கு ஒரு பெரிய சவால் முன் நின்றது. இந்த ஏரி கடல் மட்டத்தில் இருந்து 85 அடி உயரம் கொண்டதாக இருந்தது.
கப்பல் ஒருபோதும் மேல் நோக்கி எழுந்து பயணிக்காது. அப்படியென்றால் இந்த 85 அடி உயரத்துக்கு கப்பலை உயர்த்த என்ன செய்யலாம் என திட்டம் தீட்டினார்கள்.
20 ஆம் நூற்றாண்டின் மனிதகுலம் கண்ட அளப்பரிய சாதனை அங்கு நிகழ்த்தப்பட்டது.
அதுதான் ‘வோட்டர் லொக்’ எனப்படும் தொழில் நுட்பம்.
அது குறித்து இத்தொடரின் இறுதியில் பார்ப்போம்...
******
எங்கே விட்டோம்,,..?? ஆங்.. பிரான்ஸ் தலையிட்டது என்று சொன்னோம் அல்லவா..???
1881 ஆம் ஆண்டு பனாமா கால்வாய் கட்டும் பணியை பிரெஞ்சு அரசு ஆரம்பித்தது. அதே வருடம் பிரான்சின் கட்டுமான பொறியாளர் Jules Dingler, தனது குடும்பத்தினருடன் பனாமா நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.
குடும்பத்தினர் என்றால்.. அவரது மனைவி, மகன்,மகள்.. மகள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருந்த காதலன் என அனைவரும் வந்திருந்தனர்.
பெரும் கட்டுமான பொறியாளர் குழாம் ஒன்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் என மிக பிரம்மாண்டமாக ஆரம்பித்தது கால்வாய் அமைக்கும் பணி...
ஆனால் துரதிஸ்ட்டம் பிரெஞ்சு பொறியாளர்களை துரத்தியது. வேலை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில்.. 13 பொறியாளர்களின் உயிரை காவு வாங்கியது மஞ்சள் காமாலை எனும் கொடிய நோய்.
அதே நேரத்தில் Jules Dingler இன் குடும்பத்தினரையும் இந்த கொடிய நோய் காவு வாங்கியது. முதலில் இவரின் மகள் இறந்து போக,... சில நாட்களில் அவரது மகனும் இறந்து போனார்.
இன்னும் சில நாட்களில் அவரது மனைவியும் இறந்து போக.. எஞ்சியிருந்தது Jules Dingler உம் அவரது மருமகனும் தான்.
மில்லியன் கணக்கில் பணத்தினை கொட்டியும் வேலை நடைபெறவில்லை.
(நாளை)