ஒரு கட்டிடத்தால் வந்த தலைவலி..!!
23 புரட்டாசி 2020 புதன் 10:30 | பார்வைகள் : 19954
லா டிபன்ஸ் பகுதியில் உள்ள பாரிய கட்டிட்டம் பற்றி முன்னைய பிரெஞ்சுப் புதினத்தில் சொல்லியிருந்தோம் அல்லவா? அதை நிர்மாணிக்க ஆரம்பித்தபோதுதான் அரசுக்கு ஒரு தலைவலி வந்து சேர்ந்தது.
நாம் முன்பே சொல்லியிருந்தோம் அல்லவா, ‘சோம்ப்ஸ் எலிசேயில்’ ஒரே நேர்கோட்டில் இரண்டு வரலாற்றுச் சின்னங்களை அமைத்துள்ளார்கள் என்று. அதே நேர்கோட்டில்தான் இந்த Grande Arche எனப்படும் கட்டிடமும் அமைப்பதாகத் திட்டம்.
இதனை வெற்றிகரமாக அமைத்தால் கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலையில், மூன்று முக்கிய வரலாற்றுச் சின்னங்கள் வந்துவிடும். அது காண்போரைக் கவர்ந்து இழுக்கும் என்பதுதான் அரசு போட்ட கணக்கு.
திட்டப்படி கட்டிடவேலைகளை ஆரம்பித்தார்கள். முதலில் அத்திரவாரம் தோண்ட வேண்டும் இல்லயா? பரிசிலே எங்கே போய் தோண்டுவது? இங்கே நிலத்துக்கு மேலே ஒரு வாழ்க்கை என்றால், நிலத்துக்கு கீழே இன்னொரு வாழ்க்கை.
லா டிபன்ஸ் பகுதியிலே தோண்ட ஆரம்பித்தால், உள்ளே ‘மெட்றோ’ ஒரு பக்கம், RER எனப்படும் வெளிமாவட்ட தொடரூந்துக்கள் ஒரு பக்கம், போதாக்குறைக்கு A14 நெடுஞ்சாலை இவை எல்லாம் ஏற்கனவே நிலத்துக்கு கீழே துண்டு போட்டு, இடம்பிடித்து பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தன.
இவற்றுக்கு மேலே ஒரு பாரிய கட்டிடத்தைக் கட்டுவதென்றால் சும்மாவா? ‘இந்தத் திட்டம் சரிப்பட்டு வராது’ என்று மீடியாக்கள் ஒருபக்கம். ‘ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்று அரசு மறுபக்கம். ஒரே இழுபறி.
கட்டிட பொறியியலாளர்களுக்கு இது ஒரு பெரிய சவால். அவர்கள் அரசிடம் சென்று ‘அவசியம் லா டிபன்ஸ் பகுதியில் தான் இதைக் கட்டியே ஆகணுமா? என்று கேட்க, ‘ஆமாம் பெற்றோல் மக்ஸ் லைட்டேதான் வேணும்’ என்று அரசு அடம்பிடிக்க, கடைசியில் ஆய்வுக்கு மேல் ஆய்வு செய்து, அங்குலம் அங்குலமாக அளந்து, கூட்டிக் கழிச்சு கணக்குப் பார்த்து, பல கல்குலேட்டர்களுக்கு ‘பட்டரி லோ’ ஆக்கி, ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
அதாவது நேர்கோட்டில் இருந்து 6.33 பாகை விலத்தி கட்டினால், நிலத்துக்கு கீழே ஏற்கனவே குடிகொண்டிருக்கும் Metro வுக்கோ, RER க்கோ எந்த சேதமும் வராது.
பிறகு அதே திட்டத்தின்படி கட்டப்பட்ட அந்த பாரிய கட்டிடம் இன்றுவரை பளபளப்போடு, மினுமினுப்போடு மின்னிக்கொண்டு இருக்கிறது.