பரிசில் வரிசைகட்டி நிற்கும் வரலாற்றுச் சின்னங்கள்!
20 புரட்டாசி 2020 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 20070
வரலாற்றுச் சின்னங்கள், கட்டிடங்களுக்கு பரிசில் பஞ்சமா என்ன? எங்கு பார்த்தாலும், திரும்பும் திசை எங்கும் வரலாற்றுப் பொக்கிஷங்களை தன்னுள் குவித்து வைத்துள்ளது இந்த காதல் நகரம் பரிஸ்.
இந்தப் பொக்கிஷங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதைப் பார்த்த அந்தக் கால ஆட்சியாளர்கள் ‘அம்மிக் கல்லைக் கொத்தத் தெரியாதவன் கொத்தியது போல இருக்கிறது பரிசின் அமைப்பு’ என்று நினைத்துவிட்டு, ஒரே நேர்கோட்டில் சில வரலாற்றுச் சின்னங்களை அமைப்பது என்று முடிவெடுத்தார்கள்.
அங்கும் இங்கும் வளையாமல் நேர்பாதையாக இருக்கும் ‘சோம்ஸ் எலிசே’ பெரு வீதியை தேர்ந்தெடுத்தார்கள். அதில் ஏற்கனவே ‘வெற்றி வளைவு’ கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது அல்லவா? நான்கு கால்களைக் கொண்ட அந்தக் கட்டிடத்தின் நடுவே, சதுர வடிவில் ஜன்னல் போன்ற ஓர் அமைப்பு உள்ளது.
அதிலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி, அதே நேர்கோட்டில் ‘கொன்கோர்ட் பூங்கா’விலே இன்னொரு கட்டிடத்தை அமைத்தார்கள். Arc de Triomphe du Carrousel என்பது அதன் பெயர். அதுவும் ஒரு வரலாற்றுச் சின்னமே. அதே சதுர வடிவில், ஜன்னல் போன்ற அமைப்பில்.
இப்போது நீங்கள் Arc de Triomphe du Carrousel இல் நின்றுகொண்டு, எதிர்ப்பக்கம் பார்த்தீர்கள் என்றால், அங்கே ‘வெற்றி வளைவு’ சமாந்தரமாகத் தெரியும். உங்களுக்கு கொஞ்சம் கமெரா வித்தை தெரியும் என்றால், Arc de Triomphe du Carrousel இன் நடுவே உங்கள் ‘அன்புக்குரிய ஒருவரை’ நிற்க வைத்து கமெராவை ஸூம் செய்தீர்கள் என்றால், அவர் வெற்றி வளைவின் கீழ் நிற்பது போல போட்டோ எடுக்கலாம்.
இதை இன்னும் எளிமையாகச் சொன்னால், உதைபந்தாட்ட மைதானத்திலே இரண்டு கோல்கள் போடும் இடம் இருக்கும் அல்லவா? அவை இரண்டும் ஒன்றுக்கொண்டு எதிராக, ஒரே அளவில், அங்குலம் கூட விலகாமல் நேருக்கு நேர் இருக்கும் இல்லையா? அதேபோலத்தான் இந்த இரண்டு கட்டிடங்களும்.
இந்த இரண்டோடு நிறுத்திவிட்டார்களா என்ன? இல்லை இல்லை. அவர்களும் நிறுத்தவில்லை. நாமும் நிறுத்தாமல் நாளை சொல்கிறோம். சரியா?