பிரித்தானியாவில் நர்ஸ் மாணவர்களின் சேர்க்கை குறைவு
19 புரட்டாசி 2024 வியாழன் 08:56 | பார்வைகள் : 1654
பிரித்தானியாவில் கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் நர்ஸ் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை என்பது மிக மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது 21 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக ராயல் நர்சிங் கல்லூரி குறிப்பிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 23,800 மாணவர்கள் நர்ஸ் படிப்புகளுக்கு முன்வந்துள்ளதாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் சேர்க்கை சேவை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 340 மாணவர்கள் குறைவு என்றும் 2021 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 6,350 குறைவு என்றும் தெரிய வந்துள்ளது.
தற்போதைய சூழல் மிக இக்கட்டான நிலையில் இருப்பதாகவே ராயல் நர்சிங் கல்லூரி குறிப்பிட்டுள்ளது.
2023 கல்வியாண்டை ஒப்பிடுகையில் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 0.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஆனால் நர்ஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 12 மாதங்களில் 1.4 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.
2020 மற்றும் 2021ல் நர்ஸ் படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை அதிகமாக காணப்பட்டது என்றும், ஆனால் மீண்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
புதிதாக தகுதி பெற்ற நர்ஸ் ஒருவருக்கு தொடக்க ஊதியமாக 30,000 முதல் 35,000 பவுண்டுகள் வழங்க வேண்டும் என்றும் ராயல் நர்சிங் கல்லூரி அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை மிக மோசமான நிலையை எட்டியுள்ளது என்றே தொடர்புடைய சுகாதார அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.