லெபனான் மீது படையெடுக்குமா இஸ்ரேல்..? அமெரிக்கா தகவல்
19 புரட்டாசி 2024 வியாழன் 09:54 | பார்வைகள் : 2149
லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள தாக்குதல் சம்பவங்களை அடுத்து அமெரிக்க அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் முன்னெடுத்த இருவேறு நூதன தாக்குதல் சம்பவத்தால் ஹிஸ்புல்லா படைகள் மற்றும் லெபனான் நாடும் நடுக்கத்தில் உள்ளது.
இனி அலைபேசிகள் வெடிக்குமா? அல்லது குடியிருப்புகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் வெடிக்குமா என மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
ஆனால் தற்போதுள்ள நிலைமையில் லெபனான் மீது ஊடுருவல் நடத்தவோ அல்லது ஒரு முழுமையான படையெடுக்கவோ இஸ்ரேல் முயற்சிக்கவில்லை என்றே அமெரிக்க அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹிஸ்புல்லா படைகள் பயன்படுத்திய பேஜர்கள் மற்றும் walkie-talkie கருவிகள் வெடித்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து பதிலடி எதிர்பார்க்கலாம் என்றே கூறப்படுகிறது.
குறிப்பாக ஹிஸ்புல்லா தீவிரமான தாக்குதலுக்கு முடிவெடுக்கும் என்றால், தற்போதைய நிலைமைகள் தலைகீழாக மாறவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். சமீபத்திய இரு தாக்குதல் சம்பவமும் இஸ்ரேல் நடத்தியதாகவே அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஆனால் இதே வகை தாக்குதலை ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஒன்று இஸ்ரேல் மீது நடத்தியிருந்தால், இந்நேரம் அமெரிக்காவே போருக்கு புறப்பட்டிருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கில்லை என்றே அமெரிக்கா கூறி வருகிறது.
மேலும், லெபனானில் நடந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கில்லை என ஈரானிடம் ரகசியமாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் ஹசன் நஸ்ரல்லா வியாழக்கிழமை விளக்கமளிப்பார் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் லெபனானில் உள்ள அமெரிக்க மக்கள் கவனத்துடன் இருக்க அழைப்பு விடுத்துள்ளது.
பேஜர்கள் மற்றும் walkie-talkie கருவிகள் வெடித்துள்ள நிலையில் மருத்துவமனையில் அதிக கூட்டம் காணப்படலாம் என்றும், மருத்துவ தேவைகளுக்காக மருத்துவர்களை நாடுவோர் நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.