La Défense - அழகு மிளிரும் வணிக நகரம்..!!
19 புரட்டாசி 2020 சனி 13:30 | பார்வைகள் : 19789
பரிஸ் என்றாலே பழைய கட்டிடங்களும் பாசி தூசிகளும் தான் உங்கள் நினைவுக்கு வரும் என்றால், அது உண்மைதான். காரணம், இங்கு லூவர் நூதனசாலையில் இருந்து, ஏனைய அனைத்து புகழ்மிக்க கட்டிடங்களும், பாசி படிந்த பழைய கட்டிடங்களே..!! உள்ளே நுழைந்தால் எல்லாமே பளபளப்பாக இருக்கும். ஆனால் வெளித்தோற்றம் - பழசோ பழசு.
இப்படி நீங்கள் ‘பரிஸ் என்றாலே பழசுதானே’ என்று பஞ் டயலாக் பேசலாம் என்றால், ‘ஊஹூம். அது நடக்காது. எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்று உங்கள் கண்களை அகல விரிய வைக்கும் இடம் தான் ‘லா டிபன்ஸ்’.
அதுவும் பரிஸ் தான். அங்கே சென்றீர்கள் என்றால் ‘என்னது 10 நிமிடத்தில் அமெரிக்காவுக்கு கூட்டி வந்துவிட்டீர்களே’ என்பீர்கள். அவ்வளவு வானுயர்ந்த கட்டிடங்களும் பளபளப்பான சாலைகளும் என்று ‘மின்னி முழங்கும்’ லா டிபன்ஸ்.
பரிசில் இருந்து மேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில், 560 ஹெக்டேயர் நிலப்பரப்பில், 19 வானை முட்டும் கோபுரங்களுடன் 72 கண்ணாடி கட்டிடங்கள் கொண்ட ‘அழகிய அசுரன்’ தான் லா டிபன்ஸ்.
இங்கு பல சர்வதேச கம்பெனிகளின் அலுவலகங்கள், வியாபார கொடுக்கல் வாங்கல்கள், பங்குச் சந்தைகள் என்று ஒரே காசு பணம் துட்டு மணி தான்.
வெளியே பார்த்தால், உல்லாசப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் என்று ஒரு ஆயிரம் பேர் அங்கும் இங்கும் திரிவார்கள். ஆனால் உள்ளே 180,000 பேர் வேலை செய்கிறார்கள்.
எங்கிருந்து வருகிறார்கள்? காரை எங்கே பார்க் செய்கிறார்கள்? என்றெல்லாம் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கணக்காக வேலைக்கு வருவார்கள்.
இந்த லா டிபன்ஸ் வர்த்தக நகரம் குறித்து பலப் பல கதைகள் உண்டு. ‘இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதினால்தான் என்ன?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
எழுதுவோம் - பொறுத்திருங்கள்.