Paristamil Navigation Paristamil advert login

'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டில் ரஜினி கதை சொல்வாரா ?

  'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டில் ரஜினி கதை சொல்வாரா  ?

19 புரட்டாசி 2024 வியாழன் 15:09 | பார்வைகள் : 3833


தசெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையமைக்க, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், பஹத் பாசில், ராணா டகுபட்டி மற்றும் பலர் நடிப்பில் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ள படம் 'வேட்டையன்'. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள், நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் வெளியான 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, ரஜினிகாந்த் பேசிய 'கழுகு, காக்கா' கதை பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைத்தளங்களில் கடும் மோதல் ஏற்பட்டது. அதன்பின் நடந்த 'லியோ' வெற்றி விழாவில் விஜய் பேசுகையில், வேட்டைக்காரர் இருவர் முயல், யானை ஆகியவற்றை அடித்தது பற்றிய கதை ஒன்றைப் பேசினார். யானைக்குக் குறி வைத்தவர் தோற்றாலும் அது வெற்றிதான் என்றார்.

அதன் பின் நடந்த 'லால் சலாம்' இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த், காக்க கழுகு கதை வேற மாதிரி போயிடுச்சி. இவர் விஜய்யைதான் சொல்றாருனு போட்டாங்க, அது ரொம்ப வருத்தமாக இருக்கு. விஜய் உழைப்பால இன்னைக்கு வேற உயரத்திற்கு வளர்ந்திருக்காரு. இப்ப நிறைய சமூக சேவைகள் பண்ணிட்டிருக்காரு. விஜய்யை எனக்கு போட்டின்னு நினைச்சா, எனக்கு மரியாதை, கவுரவம் இல்லை, அதே மாதிரிதான் அவருக்கும்,” என்று பேசி 'காக்கா கழுகு' கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனாலும், 'தி கோட்' வெளியீட்டின் போது மீண்டும் ரஜினி, ரசிகர்கள் இடையே மோதல் உருவானது. நாளை 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டில் ரஜினிகாந்த் என்ன கதை சொல்லப் போகிறார் என ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்