தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு; அடுத்தாண்டில் தொடங்கும்!
29 ஐப்பசி 2024 செவ்வாய் 01:44 | பார்வைகள் : 733
நாட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்தாண்டு தொடங்கும் என்றும், புள்ளி விபரங்கள் 2026ம் ஆண்டில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, பிரிட்டீஷ் ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் நடத்தப்படுகின்றன.
கடைசியாக, 2011ல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ல் கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன. இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவக்கப்பட்டு, 2026 மக்கள் தொகை விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையில் சிறு மாற்றம் செய்யப்பட உள்ளது. வரும் காலங்களில், கணக்கெடுப்பு, 2025-2035, 2035-2045 என கணக்கெடுப்பு நடத்தலாம் என்ற யோசனை அரசுக்கு எழுந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும் போது, மக்களிடம் கேட்பதற்கு என 31 கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர், வீட்டின் தலைவர் பெண்ணா? வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன, திருமணம் ஆனவர்கள் எத்ததனை பேர், தொலைபேசி, இணையதள வசதி, மொபைல்போன், சைக்கிள், பைக் அல்லது ஸ்கூட்டர், சொந்தமாக கார் உள்ளதா? ஜீப் அல்லது வேன் இருக்கிறதா? குடிநீர் வசதி, மின்வசதி, கழிவறை வசதி , சமயலறை மற்றும் கேஸ் இணைப்பு, சமைப்பதற்கு முக்கிய எரிபொருள் என்ன? ரேடியோ, டி.வி. வசதி உள்ளதா? உள்ளிட்ட கேள்விகள் அடங்கும்.
சேகரிக்கப்படும் புள்ளி விவரங்கள் தொகுக்கப்பட்டு 2026ம் ஆண்டு வெளியிடப்பட உள்ளன.இந்த கணக்கெடுப்பில், ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அது மத்திய மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன