Paristamil Navigation Paristamil advert login

அதீத கற்பனையில் விஜய்: சொல்கிறார் திருமாவளவன்

அதீத கற்பனையில் விஜய்: சொல்கிறார் திருமாவளவன்

29 ஐப்பசி 2024 செவ்வாய் 01:47 | பார்வைகள் : 993


ஒரு அடி மாநாடு அடுத்த அடி கோட்டை என்ற வகையில் த.வெ.க., கட்சி தலைவரும், நடிகருமான விஜய்யின் கற்பனை அதீதமாக உள்ளது,'' என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

நீங்கள் என்ன பாயாசமா?


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டில், அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் ''நம்பி வருவோரை அரவணைப்பது தான் எங்களின் பழக்கம். எங்களை நம்பி, 2026 சட்டசபை தேர்தலில் களம் காண வருவோருக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து, அதிகார பகிர்வு வழங்குவோம்,'' எனக் குறிப்பிட்டார்.

மேலும்,யார் அரசியலுக்கு வந்தாலும், குறிப்பிட்ட கலரை பூசிவிட்டு, பூச்சாண்டி காட்டி மக்களை ஏமாற்றுகிறது. இவர்கள், 'அண்டர் கிரவுண்ட்' அரசியல் செய்து கொண்டு, தேர்தல் நேரத்தில் அறிக்கை விட்டு, 'பாசிசம்' என்கின்றனர்.

சிறுபான்மை, பெரும்பான்மை என முழு நேரம் சீன் போடுவது, இவர்களுக்கு வேலையாக போய்விட்டது. அவர்கள், 'பாசிசம்' என்றால், நீங்கள் என்ன பாயாசமா? மக்கள் விரோத ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி எனக்கூறி மக்களை ஏமாற்றுகின்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.

பழையது


இது தொடர்பாக நிருபர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி: விஜய் எப்படி செயலாற்ற போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். அரசியல் இயல்பான களம் அல்ல. எல்லா தொழில்களிலும் போட்டி உண்டு. அரசியலிலும் உண்டு. எல்லா தொழில்களிலும் சூழ்ச்சி உள்ளது. அரசியலிலும் சூழ்ச்சி உள்ளது. ஆனால், முன்கூட்டியே ஒன்றை தீர்மானிக்க முடியாத களம். கடைசி நேரத்தில் எதுவும் நிகழலாம் என்ற ஒரு களம் அரசியல் களம். விஜய் வழங்கிய முன்மொழிவுகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு கட்சிகளால் முன்மொழியப்பட்டவை. புதிதாக அவர் எதையும் சொல்லவில்லை.

கேள்விக்குறி


புதிதாக கூட்டணி ஆட்சிக்கான அச்சாரம் ஒன்றை போட்டு உள்ளார். உண்மையிலேயே அவர் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையில், அந்த சூழலில் இந்த நிலைப்பாட்டை அவர் எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான். புதிய சூழலில் அவர் இதை அரசியல் உத்தியாக கையாண்டு இருக்கிறார். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். எங்களுக்காக சொல்லப்பட்டது என கற்பனை செய்ய முடியாது.


கூட்டணி தொடரும்


தி.மு.க.,வை முதல் எதிரி என்று அறிவித்து இருப்பதும், தி.மு.க., கூட்டணியை குறி வைத்து இருப்பதும் தான் விஜய் உரையின் சாராம்சம். தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முடியுமா என ஒரு தூண்டில் போட்டு உள்ளார் என பலரும் அலசி, ஆராய்ந்து, ஆருடம் சொல்கின்றனர். தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. வலுவாக இருக்கிறது. வலுவாக தொடரும்.

முரண்பாடு


பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை பாசிசம் என்பது பா.ஜ.,வை அடையாளபடுத்தும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. பாசிச எதிர்ப்பு என்றால் பா.ஜ., எதிர்ப்பு தான். பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்கிறார் என்றால், பா.ஜ., எதிர்ப்பை நையாண்டி செய்கிறாரா? கிண்டல் செய்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. அது அவருடைய கருத்துக்கு முரண்பாடாக அமைந்து இருக்கிறது.

நையாண்டி


'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என சொல்லும் அதேவேளையில், மதத்தின் பெயரால் நடக்கும் பிளவுவாதத்தை எதிர்ப்போம்' என சொல்கின்ற அதே உரையில் பாசிசத்தை எதிர்ப்பவர்கள் நையாண்டிக்கு உரியவர்கள், கேலிக்குரியவர்கள் என்ற வகையில் பேசி உள்ளார். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா என கேட்டுள்ளார். இந்த இரண்டுக்கும் என்ன பொருத்தம் என தெரியவில்லை. அது நக்கல், நையாண்டி தொனியோடு வெளிப்பட்டு உள்ளது.

நெருடல்


பாசிசம் என்றால் என்வென்று அவர் உணர்ந்திருக்கிறாரா என தெரியவில்லை. தமிழகம், இந்தியாவை பொறுத்தவரை பா.ஜ., கோட்பாடு தான் பாசிச கோட்பாடு. பா.ஜ., எதிர்ப்புதான் பாசிச எதிர்ப்பு. பாசிசத்தை பா.ஜ.,வை எதிர்க்கக்கூடிய அனைவரையும் நையாண்டி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அவருடைய நிலைப்பாட்டில் தடுமாற்றம் இருக்கிறது. பா.ஜ., எதிர்ப்பில் அவருக்கு முரண்பாடு, நெருடல் உள்ளதாக உணர முடிகிறது.

சாத்தியமில்லாதது


ஜனநாயக களத்தில் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க முடியாது. எதிர்க்க முடியாது. தவிர்க்க முடியாது. வருபவர்களை வரவேற்பதுதான் ஜனநாயக பண்பு. ஆனால், திரையுலகில் கிடைத்துள்ள புகழ், செல்வாக்கு அப்படியே அரசியல் களத்திற்கு வரும் என சொல்ல முடியாது. அதுவும் இன்றைய சூழலில் அதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு அடி மாநாடு அடுத்த அடி கோட்டை என்ற வகையில் அவருடைய கற்பனை அதீதமாக உள்ளது.

வாமன அவதாரத்தில் பூவுலகை 3 அடியில் அளந்தார் இறைவன் என்று சொல்வார்கள்.அதுபோல கட்சி தொடங்கி மாநாடு என்ற ஒரு அடியை எடுத்து வைத்து அடுத்த அடியை கோட்டையில் வைப்போம் என்று சொல்வது அரசியலுக்கு ஒவ்வாதது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. அரசியலில் படிப்படியாக தான் உயர முடியும். வேகமாக உயரலாம். வேகமாக இலக்கை அடையலாம். எவ்வளவு வேகமாக இலக்கை சென்று அடைய முடியும் என்றாலும்கூட படிப்படியாக தான் சென்று அடைய முடியும். ஆனால் ஒரு அடி மாநாடு அடுத்த அடி ஆட்சி பீடம் என்ற நிலையில் விஜய்யை வழிநடத்தியிருக்கிறார்கள். அது சாத்தியமில்லாதது.

தமிழர் வர வேண்டும்

ஜனநாயக சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்க வேண்டும். மொழி, இனம் என்பது முக்கியமானது. அந்த உரிமைகள் முககியமானது உணர்வுகளும் முக்கியமானது.தீவிரமான மதவெறியும் சாதி வெறியும் கொண்ட ஒருவர் தமிழர் ஆக இருப்பதால் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும். அவர் ஜனநாயக தமிழராக இருக்கவேணடும் சாதியற்றவராக இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்