அமெரிக்காவில் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைப்பு...!
29 ஐப்பசி 2024 செவ்வாய் 08:31 | பார்வைகள் : 1317
அமெரிக்காவில் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டோன்லடு டிரம்ப்பும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன.
ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள 2 வாக்குப் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளதுடன் , வாஷிங்க்டன் மாகாணத்தில் உள்ள வான்கூவர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இரு சம்பவங்களிலும் தீயணைத்துப்புத்துறை துரிதமாக செயல்பட்டு தீயை அனைத்தது.
எனினும் உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான வாக்குச்சீட்டுகள் தீயில் சேதமடைந்தன. இதனால் சொற்ப வாக்குச்சீட்டுகளை மட்டுமே சேதமின்றி மீட்க முடிந்ததது. இந்த சம்பவங்கள் குறித்து எப்.பி.ஐ. விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்துள்ளதால் இதை செய்தது ஒரே கும்பலா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.
இதற்கிடையே செலுத்தப்பட்ட வாக்குகளை மீண்டும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவங்களுக்கு அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.