மார்பக புற்றுநோய்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10559
குழந்தையின்மை, டென்ஷன், தவறான உணவு முறை, ரசாயன உரம் உள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை தடுத்து உயிரை பாதுகாக்கலாம். பெண்களைப் பொறுத்தவரை 40 வயதில் இருந்து மார்பகப் புற்றுநோய் தாக்க வாய்ப்புகள் உள்ளது.
இதனால் 35 வயது முதல் பெண்கள் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த வயதில் பெண்களின் மார்பகத்தில் திடீர் சுருக்கம் அல்லது வீக்கம், காம்பில் நீர்வடிதல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மார்பகத்தில் சதைக் கோளங்கள் போன்ற வளர்ச்சியின் காரணமாக மார்பகம் பெரிதாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதில் 80 சதவீதக் கட்டிகள் கேன்சர் கட்டிகள் இல்லை என்பதும் உண்மை. இருப்பினும் அறிகுறிகள் ஏதும் தோன்றினால் பெண்கள் கேன்சருக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
மார்பகத்தில் கட்டிகள் ஏதும் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும். அழுத்தினால் கட்டிகள் இருப்பது போன்று தோன்றினாலோ, கட்டிகளில் வலி இருப்பது போல உணர்ந்தாலோ, வலி இல்லாவிட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
அடுத்தகட்டமாக மார்பகப் புற்றுநோய் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள மெமோகிராபி எனப்படும் எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனை மூலம் புற்றுநோயை உறுதி செய்ய முடியும். மேலும் நுண்ணிய ஊசியின் வழியாக கட்டியின் திசுக்களை சேகரித்து ஆய்வுக்கூடத்தில் சோதித்து அதனை உறுதி செய்து கொள்ளலாம்.
கேன்சர் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிகளவில் ஹார்மோன் மாத்திரை உட்கொள்பவர்கள், மாதவிலக்கு காலத்தில் மார்பில் வரும் மாற்றத்துக்கு சரியாக சிகிச்சை எடுக்காதவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், குறைந்த வயதில் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியவர்கள்,
எப்போதும் மன வருத்தத்தில் இருப்பவர்கள், அதிக உதிரப்போக்கு, அதிக வெள்ளைப் போக்கு போன்ற பிரச்னையை முறையாக கவனிக்காமல் விட்டவர்கள், தைராய்டு பிரச்னைக்கு சிகிச்சை எடுக்காதவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பரம்பரை காரணங்களாலும் கேன்சர் வரலாம்.