ஜார்க்கண்ட் மதுபான கொள்கை முறைகேடு ஐ.ஏ.எஸ்., வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை
30 ஐப்பசி 2024 புதன் 03:08 | பார்வைகள் : 937
ராஞ்சி:ஜார்க்கண்ட் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களுக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
குற்றச்சாட்டு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, கடந்த 2022ல் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கை, மாநில அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, அப்போது கலால் துறை செயலராக இருந்த வி.கே.சவுபே, இணைச்செயலர் கஜேந்திர சிங் உட்பட மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் என பலர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை மோசடி வழக்கில், அமலாக்கத் துறையும் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வி.கே.சவுபே, கஜேந்திர சிங், மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின்னடைவு
இதேபோல் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரிலும் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் நவ., 13 மற்றும் 20ல், இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ள நிலையில், அமலாக்கத்துறை சோதனை ஆளுங்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.