நவிகோ வருவதற்கு முன்னர்...!!
13 புரட்டாசி 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18814
தொழில்நுட்பங்கள் மாதாமாதம் தான் மாறுகின்றன. போன மாதம் புதிதாய் இருந்த தொழில்நுட்பம் எல்லாவற்றையும் இம்மாதம் மியூஸியத்தில் வைத்து விடுகிறார்கள். அப்படி வெறும் 'நினைவுகளாக மாத்திரம்' மாறிப்போன ஒரு விடயம் தான் இன்றைய பிரெஞ்சு புதினம்.
உங்கள் அனைவரிடம் நவிகோ பயண அட்டை இருக்கும். இந்த அட்டைகள் 2001 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கு முன்னர் இதற்கு பதிலாக என்ன இருந்தது என தெரியுமா??
<<Carte Intégrale>> எனும் ஒரு பயண அட்டை இருந்தது. இது நவிகோ போன்று பல்வேறு வசதிகள் கொண்டதலல்ல... வருடாந்த 'பாஸ்' போன்றது.
இந்த அட்டையை வைத்திருப்பவர்கள் பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் வருடம் தோறும் பயணிக்கலாம். Orlyval சேவைகளைத் தவிர அனைத்து மெற்றோ, பேருந்து, தொடருந்துகளையும் பயன்படுத்தலாம்.
வருடத்தின் முதலாவது மாதத்தில், அதாவது ஜனவரி மாதத்தில் இந்த அட்டையை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறவிடப்பட்டால் பின்னர் அடுத்த வருடம் தான் வாங்க முடியும்.
மொத்த தொகையையும் உடனே செலுத்தியும் வாங்க முடியும்.. அல்லது 11 மாத தவணையாகவும் கட்ட முடியும்.
இந்த பயண அட்டை உங்களில் எத்தனை பேர் பயன்படுத்தியிருப்பீர்கள் என தெரியவில்லை. ஆனால் இதற்கு பின்னர் அது எப்போதுமே நினைவுகள் தான்.
இன்று நவிகோ அட்டை உங்கள் வங்கிக்கணக்கின் மூலம் பணம் செலுத்தி புதுப்பிக்கக்கூடிய அளவு நவீனமயமாகிவிட்டது.