தீபாவளி ஆபர் போல இருக்கு விஜய்யின் அறிவிப்பு; திருமாவளவன் விமர்சனம்
1 கார்த்திகை 2024 வெள்ளி 05:09 | பார்வைகள் : 853
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்திருப்பது, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்று வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தனது கொள்கை, கோட்பாடுகளை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி போடுவதற்கு தயார் என்றும், ஆட்சியதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்புக்கு தி.மு.க., அ.தி.மு.க.,கூட்டணியில் உள்ள கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. முதல் ஆளாக வி.சி.க.,வின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ஆட்சியதிகாரத்தில் பங்கு என அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விஜய்யின் நிலைப்பாடு குறித்து வி.சி.க., தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆட்சி அதிகாரத்தில் பங்கு-னு யாருக்கு சொல்லப்பட்டது, எல்லாரும் வி.சி.க.,வுக்காகத் தான் சொன்னதாக சொல்றாங்க. வி.சி.க., உடனே எப்படி இந்த அறிவிப்புக்காக ஒரு முடிவு எடுக்க முடியும். இது தப்பு தானே.
இது தேர்தல் உத்தி என்று இல்லாமல் கமெர்சியல் போல உள்ளது. அதாவது, தீபாவளி சமயத்தில் அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூடும் நிலையில், தங்களின் கடைக்கு வாடிக்கையாளர்களை ஈர்க்க, தள்ளுபடி அறிவிப்பது போன்று ஆஃபரை வெளியிட்டுள்ளது போல் இருக்கிறது விஜய்யின் அறிவிப்பு.
இது என்னோட பார்வையிலான விமர்சனம். இது தப்பாக கூட இருக்கலாம். இது சரியில்லை-னு கூட நீங்க சொல்லலாம். கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி தான். விஜய்யின் இந்த அறிவிப்பு எதுக்கு பயன்படுகிறது என்றால், தி.மு.க., கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. மற்றபடி அவங்க எதிர்பார்க்கும் ஏதும் நடக்காது. அந்த விளைவை உருவாக்காது.
தமிழகத்தில் 30 முதல் 35 சதவீத வாக்குகள் பெறுபவர்கள் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். விஜயால் தனித்து நின்று 30 சதவீத வாக்குகளை வாங்க முடியுமா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.