கவினின் பிளடி பெக்கர் படம் எப்படி இருக்கு?
1 கார்த்திகை 2024 வெள்ளி 07:49 | பார்வைகள் : 180
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தால் தன்னைப் பற்றி அப்படியே பேசிவிடுவார்கள் என்ற அதீத நம்பிக்கையை வைத்திருப்பார்கள். அப்படி ஒரு அதீத நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்தப் படம்.
ஒரு படத்தில் கதாபாத்திரம் மட்டும் முக்கியமல்ல, என்ன கதையைச் சொல்கிறோம், அதில் என்ன கருத்தைச் சொல்கிறோம் என்பதே முக்கியம். எந்தக் கருத்தையும் சொல்லவில்லை காமெடியைத்தான் சொல்கிறோம் என்றால் அதை எங்காவது ஒரு இடத்திலாவது வைத்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் 'டார்க் காமெடி, பிளாக் காமெடி' என சொல்லிவிட்டு இப்படியான 'ப்ளடி காமெடி'களை மட்டுமே சொல்லி நம்மை மிகவும் சோதிக்கிறார்கள்.
இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார், படத்தை முதலீடு செய்து தயாரித்த இயக்குனர் நெல்சன் எந்த ஒரு தைரியத்தில் இந்தப் படத்தை எடுத்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதெல்லாம் வேற மாதிரியான படம் தெரியுமா என்று கூவுபவர்கள் தியேட்டர்களுக்குச் சென்று நேரில் பாருங்கள். மக்களின் ரசனை என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஏமாற்று பிச்சைக்காரராக இருப்பவர் கவின். ஒரு பிரம்மாண்ட மாளிகை வீட்டின் முன்பு நடந்த அன்னதான விருந்தில் கலந்து கொள்கிறார். அந்த வீட்டைப் பார்த்து ஆசைப்பட்டு அதற்குள் நுழைகிறார். ஆனால், வெளியில் வர முடியாமல் மாட்டிக் கொள்கிறார். அந்த வீட்டின் சொத்தைப் பிரிப்பதற்காக வாரிசுகள் பலத்த சதித் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களுக்கிடையில் சிக்கும் கவின் என்ன ஆனார் என்பதே படத்தின் கதை.
பிச்சைக்காரத் தோற்றத்தை நிஜமாகக் கொண்டு வர தோற்றத்தில், உடையில், நடையில், பேச்சில் என தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் கவின். பிச்சைக் கேட்கும் போது பேசும் நக்கல் எல்லாம் மொக்கை ரகம்தான். அதன்பின்பு அந்த பிரம்மாண்ட மாளிகையில் சிக்கிய பின் அந்த சொத்துக்களின் வாரிசு என நாடகமாட வைக்கப்படுகிறார். அப்போது பிச்சைக்காரன் தோற்றத்திலிருந்து கொஞ்சம் மாறி பார்க்க பேண்ட் சட்டை போட்ட கிராமத்து அப்பாவி போல தெரிகிறார். சொத்துக்காக சண்டை போடும் வாரிசுகளிடமிருந்து தப்பித்து ஓடிக் கொண்டேயிருப்பதுதான் பாதிப் பட நடிப்பாக இருக்கிறது. கதாபாத்திரம் மட்டும் போதாது கவின், கதையும் வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
படத்தில் கவினைத் தவிர்த்து நமக்குத் தெரிந்த முகம் என்றால் ரெடின் கிங்ஸ்லி. அதே கத்தல், கூச்சல் என ஒரே மாதிரி நடிப்பில் எரிச்சல் தருகிறார். ரெடினை காமெடியன் என்று சொல்கிறார்கள். இப்படி நடித்தால் இன்னும் எத்தனை படம் தாங்குவாரோ ?. சொத்துக்காக சண்டை போடும் வாரிசுகளாக ஒரு பெரும் கூட்டமே நடித்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, டிராமா ஆர்ட்டிஸ்ட் போல நடித்திருக்கிறார்கள்.
ஒரே ஒரு மாளிகைக்குள் பல இடங்களில் காமரா பயணித்துக் கொண்டே இருக்கிறது. ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங். லைட்டிங்கிற்காக நிறையவே உழைத்திருப்பது தெரிகிறது. ஒன்றுமில்லாத காட்சிகளுக்கெல்லாம் பில்ட் அப் ஏற்றுகிறார் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின்.
படத்தின் கிளைமாக்சில் மட்டும் ஒரு சென்டின்மென்ட் கொஞ்சமாக நெகிழ வைக்கும். ஒட்டு மொத்த படத்தின் ஒரே ஆறுதல் அது மட்டுமே.