ஸ்பெயினில் கனமழை - 150-க்கும் மேற்பட்டோர் பலி
1 கார்த்திகை 2024 வெள்ளி 13:43 | பார்வைகள் : 1545
ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியை ஸ்பெயின் முடுக்கிவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இது ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளனவா என தேடும் சவாலநிலை அங்கு நிலவுகிறது. அந்த நாட்டின் கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு மற்றும் புதன்கிழமை அன்று ஸ்பெயினில் கனமழை பொழிந்தது. இதில் கிழக்கு வலேன்சியா பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் சாய்ந்த மின்கம்பங்கள், வேரோடு சாய்ந்த மரங்கள், சேரும் சகதியுமான வீதிகள் மற்றும் வீடுகள், ஒன்றான மீது ஒன்றாக நின்ற கார்கள் என்று திரும்பும் பக்கமெல்லாம் சேதம். இதற்கு மத்தியில் தான் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை (அக்.31) அன்று வெள்ள பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தேடிய சோகம் காண்பவர்களின் மனங்களை கலங்க செய்தது. பலர் மாயமாகி உள்ள காரணத்தால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
’மிதக்கும் கல்லறை’ .. வெள்ள நீர் வீதிகளில் பெருக்கெடுத்து பாய்ந்த காரணத்தால் குடியிருப்பு பகுதிகள் அப்படியே நீரால் சூழ்ந்த பகுதி போல காட்சி அளிக்கின்றன. வீதிகள் மிதக்கும் கல்லறையாக மாறியதாக உள்ளூர் மக்கள் சொல்லியுள்ளனர். தெற்கு வலேன்சியா நகரின் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் வெள்ளத்தில் சிக்கிய கார்களில் இருந்தவர்களை வெல்டரான லூயிஸ் சான்செஸ் என்பவர் பத்திரமாக மீட்டுள்ளார்.
“மீட்பு படையினர் மூத்த குடிமக்களை தான் மீட்டனர். நான் உள்ளூர் வாசி என்பதால் என்னால் முடிந்தவர்களை மீட்டேன். சில உடல்கள் நீரில் அடித்துச் சென்றதை நான் பார்த்தேன். வெள்ளத்தில் சிக்கிய மக்கள் செய்வதறியாமல் கலங்கி நின்றனர்” என அந்த சூழலை லூயிஸ் விவரிக்கிறார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலமாகவும் ஸ்பெயின் ராணுவம் மீட்டது. சுமார் 70 பேரை இப்படி மீட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் மொட்டை மாடி மற்றும் கார்களில் சிக்கி இருந்தவர்கள். தரைவழியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை புதன்கிழமை அன்று அணுக முடியாத சூழலை ராணுவம் எதிர்கொண்டது. தற்போது அங்கு வீடு வீடாக ராணுவத்தினர் மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
காலநிலை மாற்றம் தான் காரணம்.. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டறிவதே எங்களது முதல் பணி. அதன் மூலம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு நாங்கள் உதவ முடியும் என நம்புகிறோம் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ தெரிவித்தார். காலநிலை மாற்றம் தான் இந்த திடீர் மழை வெள்ளத்துக்கு காரணம் என அந்த நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 மாதங்களில் வலேன்சியாவின் ஷிவா நகரில் பதிவான மழையின் அளவை காட்டிலும் அங்கு வெறும் 8 மணி நேரத்தில் மழை அதிகம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் விளை நிலங்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை அன்றும் அங்கு மழை தொடர்ந்தது. சுமார் 1.5 லட்சம் மக்கள் அங்கு மின்சார வசதி இல்லாமல் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
உயிர் வாழ்வதற்கான அடிப்படை உணவு ஆதாரம் கூட இல்லாமல் வலேன்சியா மக்கள் தவித்து வருகின்றனர். அதன் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளை நாடும் நிலைக்கு அவர்கள் ஆளாகி உள்ளனர். “நாங்கள் யாரும் திருடர்கள் இல்லை. வெள்ளத்தால் எங்களிடம் எதுவும் இல்லை. எனது குழந்தைக்கு தேவையான உணவை எடுக்கவே நான் இந்த கடைக்கு வந்துள்ளேன்” என நீவ்ஸ் வர்காஸ் என்பவர் தெரிவித்தார். தரைவழி போக்குவரத்து துண்டிக்கப்பட்ட காரணத்தால் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியாத சூழல் நிலவுகிறது.