Paristamil Navigation Paristamil advert login

மழை நீரில் எங்கள் கண்ணீர்

மழை நீரில் எங்கள் கண்ணீர்

3 கார்த்திகை 2024 ஞாயிறு 06:55 | பார்வைகள் : 674


அன்றும் சரி இன்றும் சரி
மழையே மழையே
வா வா வென்று
அன்பாகதான் உன்னை
அழைக்கின்றோம்

மண்ணில் நீ தங்கி மகிழ்ந்த
இடங்களில் நாங்களும்
அவ்வப்போது வந்து தங்கி
அன்று விளையாடி மகிழ்ந்தோம்
இன்று உன்னைக் காணாமல்
தவிக்கின்றோம்

யார் கண் உன் மீது பட்டதோ
தெரியவில்லை
நீ தங்கி மகிழ்ந்த இடத்தை
யாருக்கும் தெரியாமல் அழித்து
யானை தன் தலையில் தானே
மண்ணை வாரி போடுவது போல
மண்ணைப் போட்டு மறைத்தார்கள்

நாளாக நாளாக மண்ணைப்
போட்டு மறைந்த இடத்தை
பொன்னாக மாற்றுவதற்கு
ஆசைப்பட்ட ஏமாற்றுக்கார்கள்
வீட்டு மனைகளாக மாற்றி
ஊருக்கு இளைத்தவனைத்
தேடி தேடி விற்று மகிழ்ந்தார்கள்

மக்களும் தாங்கள் ஏமாந்து
வாங்கிய இடத்தில் வீடு கட்டி
வாழ்ந்து வருகின்றார்கள்
மழைக்காலம் வரும் போதெல்லாம்
மழை நீர் போகும் பாதைத்
தெரியாமல் தவிக்கின்றது
மக்களும் போக்கிடமின்றி
கண்ணீர் சிந்தி தவிக்கின்றார்கள்...!!

மழையே மழையே எங்களைத்
தண்டித்தது போதும்
நாங்கள் அறிந்ததும் அறியாமலும்
செய்த தவறுகளை மன்னித்து விடு...!!
எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை
மாற்றுப்பாதையில் நீ சென்று
எங்களைக் காத்திட வேண்டும் ...!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்