தேர்தல் வெற்றிக்கு ஆலோசனை கட்டணம் ரூ. 100 கோடி
3 கார்த்திகை 2024 ஞாயிறு 07:13 | பார்வைகள் : 1040
தேர்தல் வெற்றிக்கு ஆலோசனை கூறுவதற்கு கட்சிகளிடம் இருந்து குறைந்தபட்சம், 100 கோடி ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளேன்,'' என, 2021ல், தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு வியூகம் வகுத்து தந்த தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர், தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர். துவக்கத்தில், பெரிய அரசியல் பின்புலமோ, ஆர்வமோ இவருக்கு இருந்ததில்லை. ஐ.நா., நிதியுதவியுடன், ஆப்ரிக்காவில் நடந்த சுகாதாரத் திட்டங்களில் பணியாற்றினர்.
அப்போது, இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக, இவர் கட்டுரை எழுதினார்.
இது, அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் கவனத்துக்கு சென்றது. தன் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையை தீர்ப்பது தொடர்பாக, கிஷோரிடம் மோடி ஆலோசனை கேட்டார்.
அமோக வெற்றி
அதற்காக குஜராத் வந்த கிஷோர், 2012 சட்டசபை தேர்தலில், மோடிக்கு சில யோசனைகள் சொன்னார். அதை மோடி செயல்படுத்திப் பார்த்தார். தேர்தலில் அமோக வெற்றி கிடைத்தது.
அதன் பிறகுதான், கட்சியில் சீனியர்கள் பலரையும் தாண்டி, 2014 லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் மோடி. தேசிய அளவில், அவருடைய பிரசாரத்துக்கு பல வியூகங்களை கிஷோர் வகுத்துக் கொடுத்தார். மோடியும் வெற்றி பெற்று பிரதமரானார்.
இதைத் தொடர்ந்து, பிரஷாந்த் கிஷோர் இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக அமைப்பாளராக உருவெடுத்தார். சி.ஏ.ஜி., என்ற பெயரில், ஓர் அமைப்பை நிறுவினார். அது, ஐபேக் என்ற பெயரில், தேர்தல் வியூக நிறுவனமாக மாறியது.
நாடு முழுதும் பல கட்சிகள் கிஷோரை தேடி வந்தன. தி.மு.க.,வும் அதில் அடக்கம். நாட்டில், 10 மாநிலங்களில் தன் வியூகத்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதாக கிஷோர் கூறுகிறார்.
இந்நிலையில், 2022ல், ஜன் சுராஜ் என்ற அமைப்பை நிறுவிய பிரசாந்த் கிஷோர் , அதை இந்தாண்டு அக்டோபர், 2ல், அரசியல் கட்சியாக அறிவித்தார்.
அடுத்த ஆண்டு இறுதியில், பீஹாரில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை குறிவைத்து துவக்கப்பட்ட இந்தக் கட்சி, தற்போது மாநிலத்தில் நடக்க உள்ள, நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பங்கேற்கிறது. அதற்கான பிரசார கூட்டத்தில் கிஷோர் பேசியது, நாடெங்கும் விவாதிக்கப்படுகிறது.
வசதியில்லை
அவர் சொன்னதாவது: தேர்தலை சந்திக்க நிறைய பணம் தேவை; அது, கிஷோரிடம் இல்லை என்று பலர் நினைக்கின்றனர். பந்தல் போடவும், மேடை அமைக்கவும் கூட எனக்கு வசதி இல்லை என்கின்றனர்.
நான் என்ன தொழில் செய்கிறேன், எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்ற விபரம் தெரியாததால் அப்படி நினைக்கின்றனர். கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் தயார் செய்து கொடுக்கிறேன். அதற்கு குறைந்தபட்சம், 100 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கிறேன்.
இன்றைய தேதி வரை, 10 மாநிலங்களில் என் வியூகத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அப்படியானால் எவ்வளவு சம்பாதித்து இருப்பேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு கட்சிக்கு ஆலோசனை வழங்கினாலே, அடுத்த இரண்டு ஆண்டுகள் பீஹாரில் பிரசாரம் செய்வதற்கான நிதி எனக்கு கிடைத்து விடும்.இவ்வாறு கிஷோர் கூறினார்.
கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசுச்கு, ஐபேக் நிறுவனம், பிரசார யுக்திகளை வடிவமைத்தது.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,வுக்கும் பிரசார திட்டத்தை வகுத்து தந்தது. இதற்காக, தி.மு.க., 360 கோடி ரூபாய் கொடுத்ததாக அப்போது செய்திகள் வந்தன.