தமிழகத்தில் தி.மு.க.,வின் மன்னர் ஆட்சி எடுபடாது:இ.பி.எஸ்.,
3 கார்த்திகை 2024 ஞாயிறு 07:15 | பார்வைகள் : 992
2026 ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.
சேலம் மாவட்டம் வீரப்பம்பாளையம் பகுதியில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது: தி.மு.க., அரசியல் கட்சி இல்லை. குடும்ப கட்சியாக மட்டும் செயல்பட்டு வருகிறது. அக்கட்சியில் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் பதவிக்கு வர முடியும். துணை முதல்வர் ஆக்கப்பட்டு உள்ள உதியநிதி தி.மு.க.,விற்காக என்ன சாதனை செய்தார்?.
அக்கட்சியில் உதயநிதி மட்டும் தான் உழைத்தாரா? மற்றவர்கள் உழைக்கவில்லையா? தி.மு.க., மூத்த தலைவர்கள் ஸ்டாலின் கண்ணுக்கு தெரியவில்லை. உதயநிதி மட்டும் தான் தெரிந்தார். கட்சியின் அடையாளத்தை வைத்து மட்டும் உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்பட்டு உள்ளார்.
அக்கட்சியில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு உள்ளது. 2026 சட்டசபை தேர்தலோடு தி.மு.க.,வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இனி தமிழகத்தில் தி.மு.க.,வின் மன்னர் ஆட்சி எடுபடாது. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.