ஹிஸ்புல்லாவின் முக்கிய அதிகாரி ஒருவரை சிறைப்பிடித்த இஸ்ரேல்
3 கார்த்திகை 2024 ஞாயிறு 10:49 | பார்வைகள் : 1284
லெபனானின் வடக்கு பகுதியில் கடல் வழி தாக்குதலை முன்னெடுத்த பிறகு, ஹிஸ்புல்லாவின் மூத்த அதிகாரி ஒருவரை சிறைப்பிடித்து இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
லெபனானின் கடற்கரை நகரான Batroun-இல் இஸ்ரேல் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் இந்த சிறைப்பிடிப்பானது நடந்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினருடனான மோதல் தொடங்கியதில் இருந்து வடக்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலின் தனது துருப்புகளை முதல் முறையாக நிலை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரி வழங்கிய தகவலில், சிறைப்பிடிக்கப்பட்ட அதிகாரி தற்போது இஸ்ரேலுக்கு இடம் மாற்றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளில், நபர் ஒருவரின் முகம் சட்டையால் மறைக்கபட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் வீரர்கள் குழுவால் அழைத்து செல்லப்படுவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் சிறைப்பிடிக்கப்பட்ட நபர், சிவிலியன் கடல் கேப்டன் என்று ஹிஸ்புல்லாவை பிரதிநிதித்துவம் செய்யும் லெபனான் போக்குவரத்து அமைச்சர் அலி ஹமியே உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் புகார் அளிக்குமாறும் தங்களின் வெளியுறவு அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.