ஸ்டார்க்கின் அதிவேக தாக்குதலில் துவம்சமான பாகிஸ்தான்! சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரர்
4 கார்த்திகை 2024 திங்கள் 10:52 | பார்வைகள் : 642
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 203 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
மெல்போர்னில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்று அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், மிட்செல் ஸ்டார்க்கின் மிரட்டல் பந்துவீச்சில் சைம் அயூப் (1) Inside Edge ஆகி போல்டானார்.
அடுத்து 12 ஓட்டங்கள் எடுத்திருந்த அப்துல்லா ஷாஃபிக்கும் அவரது ஓவரிலேயே ஆட்டமிழந்தனர். பின்னர் பாபர் அசாம் (Babar Azam) நிதானமாக ஆடி 44 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆக, பொறுமையாக ஆடிய முகமது ரிஸ்வானை 44 (71) ஓட்டங்களில் லபுசாக்னே வெளியேற்றினார்.
அதிரடி காட்டிய ஷாஹீன் ஷா அப்ரிடி 24 (19) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். இர்ஃபான் கான் 22 ஓட்டங்களில் ரன் அவுட் ஆக, நசீம் ஷா சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்களை எட்டியது. 39 பந்துகளை எதிர்கொண்ட நசீம் ஷா (Naseem Shah) 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 40 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் 203 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.