Épinay-sur-Seine : ஓடிக்கொண்டிருந்த மகிழுந்தில் இருந்து குதித்த பெண் பலி.. விசாரணைகளில் குழப்பம்!!
6 கார்த்திகை 2024 புதன் 10:52 | பார்வைகள் : 3172
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மகிழுந்து ஒன்றில் இருந்து வெளியே குதித்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். Épinay-sur-Seine (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் இடம்பெற்று ஒன்பது நாட்களாக Pitié-Salpêtrière மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளம்பெண், நேற்று முன்தினம் நவம்பர் 4, திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். ஒக்டோபர் 27 ஆம் திகதி அன்று அப்பெண் மகிழுந்தில் இருந்து வெளியே பாய்ந்து, காயமடைந்ததாகவும், மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சாரதி வாக்குமூலம் அளிக்கையில், அப்பெண்ணை யாரென்றே தெரியாது எனவும், பணம் பறிக்கும் நோக்கில் மகிழுந்தில் பதுங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளில், மகிழுந்தில் இரண்டு இளம் பெண்கள் (வயது 18 மற்றும் 19) ஏறியிருந்ததாகவும், இருவர் பாலியல் தொழில் செய்வதாக தெரிவித்ததாகவும், பணம் தராவிட்டால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக காவல்துறையினரிடம் புகார் அளிப்பதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு வேறு கோணங்களிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. எவ்வாறாயினும், அப்பெண்களில் 18 வயதுடைய பெண் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.