Paristamil Navigation Paristamil advert login

முற்போக்கான வணிகத்துக்கு நேரம் வந்துவிட்டது: ராகுல் உறுதி

முற்போக்கான வணிகத்துக்கு நேரம் வந்துவிட்டது: ராகுல் உறுதி

7 கார்த்திகை 2024 வியாழன் 03:16 | பார்வைகள் : 481


கிழக்கிந்திய கம்பெனி நாட்டை விட்டு வெளியேறி, 150 ஆண்டுகளாகியும், அது விதைத்த ஏகாதிபத்தியம் என்ற அச்சம் தற்போது புதிய வடிவில் உள்ளது.

அனைவருக்கும் தொழில் செய்வதற்கு வாய்ப்பை தரும் முற்போக்கான வணிகத்துக்கான நேரம் வந்துவிட்டது. தொழிலதிபர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

அச்சம்

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல், பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள கருத்துக் கட்டுரையில் கூறியுள்ளதாவது:

கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டுக்குள் வந்தபோது, இங்குள்ள தொழில்களை தன் ஆதிக்கத்தால் நசுக்கியது.

இதற்காக பல தந்திரங்களை அது மேற்கொண்டது. மஹாராஜாக்காள், நவாப்களுக்கு லஞ்சம் கொடுப்பது, மிரட்டுவது என, பல வழிகளில் தன் ஆதிக்கத்தை செலுத்தியது.

நம் நாட்டின் வங்கி, நிர்வாகம் என, அனைத்தையும் கையகப்படுத்தியது. நாம், நம் சுதந்திரத்தை மற்றொரு நாட்டிடம் இழக்கவில்லை; ஏகாதிபத்தியத்தில் ஈடுபட்ட ஒரு நிறுவனத்திடம் இழந்தோம்.

அந்த உண்மையான கிழக்கிந்திய கம்பெனி, நம் நாட்டை விட்டு வெளியேறி, 150 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால், அது உருவாக்கிய அச்சம் தற்போது வேறு வடிவில் மீண்டும் வந்துள்ளது.

தற்போது சில குறிப்பிட்ட ஏகாதிபத்தியங்கள், செல்வத்தை பெருமளவில் குவித்து வருகின்றன. அதே நேரத்தில் வேறு சிலருக்கு இது போன்ற சலுகை கிடைப்பதில்லை.

நம் நாட்டில் உள்ள அமைப்புகள், மக்களுக்காக செயல்படவில்லை; இந்த ஏகாதிபத்தியங்களுக்காகவே செயல்படுகின்றன. லட்சக்கணக்கான தொழில்கள், வணிகங்கள் நசுக்கப்பட்டன. இதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

போட்டி

நம் பாரத மாதாவுக்கு அனைத்து குழந்தைகளும் ஒன்று தான். ஆனால், இந்த ஏகாதிபத்தியங்கள், நாட்டின் வளங்கள் மற்றும் அதிகாரங்களை கைப்பற்றி, மற்றவர்களை கைவிட்டு, பாரத மாதாவுக்கு காயம் ஏற்படுத்திஉள்ளன.


இந்த தன்னலக் குழுக்களை, தொழில் நிறுவனங்கள் என்று கூற முடியாது. ஒரு நிறுவனம் இவற்றோடு போட்டியிடுவது வணிக ரீதியில் அல்ல. அது, அரசு இயந்திரத்துக்கு எதிரான போட்டியாகவே உள்ளது.

தற்போது சந்தையில் வெற்றி என்பது தொழில் வளர்ச்சியால் அல்ல; அதிகாரத்துடனான தொடர்பாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போட்டியிட முடியாமல், பல தொழில்கள் அமைதியாக உள்ளன. அவர்களிடையே அச்சம் உள்ளது. ஆனாலும், சில நம்பிக்கைகளும் உள்ளன.

இவ்வாறு ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆதிக்கம் தீவிரமாக இருந்தபோதும், நேர்மையான முறையில் தொழில் செய்வோரும் உள்ளனர். அவர்களை, ஏகாதிபத்தியத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.

என் அரசியல், மஹாத்மா காந்தியின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது.

ஆதரவு

ஒரு வரிசையில் உள்ள வாய்ப்பு கிடைக்காத, பறிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதையே கடைப்பிடித்து வந்தேன்.

இதனால் தான், விவசாயிகள், ஏழை எளிய மக்கள் என பல தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறேன்.

ஆனால், இதில் நேர்மையாக தொழில் செய்யும் தொழிலதிபர்களை கவனிக்க தவறி விட்டேன். அரசு அமைப்புகளை பயன்படுத்தி, தொழில் நிறுவனங்களை நசுக்கும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டும்.

இதற்காக அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல. அவர்கள் மோசமான தனிநபர்கள் அல்ல. இந்த சமூக மற்றும் அரசியல் சூழ்நிலையில், அவர்கள் ஏகாதிபத்தியத்தை பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டவர்கள்.

அவர்களுக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். அனைத்து தொழில்கள், நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்புகள் இருக்க வேண்டும். இந்த நாடு அனைவருக்குமானது. முற்போக்கான வணிகத்துக்கான நேரம் வந்துவிட்டது. இது தான், நாட்டின் எதிர்கால தேவையும் கூட.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்