உடல் வெப்பத்தை கண்டறியும் T Shirt.., சீனாவிற்கு அடுத்தபடியாக தமிழர் முயற்சி
7 கார்த்திகை 2024 வியாழன் 09:48 | பார்வைகள் : 328
உடல் வெப்பத்தைக் கண்டறியும் புதிய ரக டி-சர்ட்டை தமிழகத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தயாரித்துள்ளார்.
தமிழக மாவட்டமான திருப்பூர், அம்மாபாளையத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சொக்கலிங்கம். இவர், பல ஆண்டுகளாக பின்னலாடை துறையில் அனுபவம் பெற்றுள்ளார்.
இவர், தற்போது உணர்திறன் மை பதிக்கப்பட்ட டி-சர்ட் தயாரிக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த டி ஷர்ட் குறித்து சொக்கலிங்கம் பேசுகையில், "ஆடை அணிபவரின் உடல்நிலை அதிகரிக்கும் போது டி-சர்ட்டில் உள்ள எழுத்துகள் மறையும்.
இதற்காக தெர்மோ குரோமிக் முறையிலும் கொசுக்கள் அண்டாத வகையிலும், உடல் வெப்பத்தைக் கணிக்கும் வகையிலும் மை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த டி-சர்ட் பல்வேறு சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்த டி-சர்ட் மறு சுழற்சிக்கு உட்படுத்தக்கூடியது.
அதாவது, நாம் இதனை அணியும்போது உடல் வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டை அடையும்போது நிறம் மாறும். அதற்கு கீழ் குறையும் போது பழைய நிறத்தை அடையும்.
இந்த ஆடைகளை பருத்தி, பாலியெஸ்டர் என அனைத்து ரக துணிகளிலும் தயாரிக்க இயலும். சீனாவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்காக இந்த மாதிரி ஆடை கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், அதில் சில இடங்களில் மட்டும் சிப் வைத்திருப்பதால் உடம்பின் முழு பகுதி வெப்பநிலையை அறிய முடியாது.
ஆனால், இந்த ஆடையானது விளையாட்டு வீரர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். இதற்கு காப்புரிமை போன்ற விடயங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ளேன்" என்றார்.