மஞ்சள் தரும் மருத்துவ பலன்
8 கார்த்திகை 2024 வெள்ளி 07:02 | பார்வைகள் : 158
நம்முடைய இந்தியச் சமையலில் மிகவும் முக்கியமான மசாலா மஞ்சள் ஆகும். அதே சமயம் சரும அழகிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் மஞ்சள் வகையும் உண்டு. குளிர் மற்றும் மழை சீசனில் பொதுவாக நாம் எதிர்கொள்ளும் சளி, வறட்டு இருமல், தொண்டைவலி, காய்ச்சல் என நம்மை பாதிக்கச் செய்யும் பல பாதிப்புகளிலிருந்து தப்பிக்க நம் அனைவரது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் அற்புதத் தீர்வாக எப்போதுமே இருக்கக் கூடியது மஞ்சள்.
பெரும்பாலும் சமையலுக்காக விரலி மஞ்சளைத் தான் நாம் பயன்படுத்துகிறோம். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மஞ்சளைப் பொடியாகப் பயன்படுத்தாமல் அப்படியே மஞ்சள் கிழங்கு வடிவில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், பல பிரச்சனைகளிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா..!!
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, புற்றுநோயைத் தடுக்க என பல ஆரோக்கிய நன்மைகளைப் பெற raw turmeric என குறிப்பிடப்படும் மஞ்சளை அப்படியே பச்சையாகச் சாப்பிடுவது மிகவும் முக்கியமானது. எனவே, காலை நேரத்தில் இதனை எடுத்து கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி காலை நேரத்தில் மஞ்சளை அப்படியே வெறும் வயிற்றில் சாப்பிடுவது ரத்தத்தைச் சுத்தப்படுத்த உதவுகிறது மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தவிர நெஞ்செரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பிஸ்வஜித் தாஸ் கூறுகையில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மஞ்சளைப் பொடி செய்யாமல் அப்படியே சாப்பிடுவது கேஸ்-ஹார்ட்பர்ன்-ஐ நீக்க உதவுகிறது.
அதுமட்டுமின்றி மூளையின் வேலை செய்யும் திறனையும் அதிகரிக்கிறது. தவிர மஞ்சளை இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வருவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்கிறார். அதே போல வெறும் வயிற்றில் மஞ்சளை அப்படியே பச்சையாகச் சிறிதளவு தினசரி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குணமாகும். மொத்தத்தில் இயற்கையாக மசாலாவாக மட்டுமல்ல மூல வடிவத்திலும் கூட மஞ்சள் ஆயிரம் மடங்கு சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள்.
காலையில் வெறும் வயிற்றில் மஞ்சளை மென்று சாப்பிடுவதால் பல கொடிய நோய்கள் நீங்கும். இதற்கிடையே நம் அன்றாட உணவில் ஏதாவதொரு வகையில் மஞ்சளைச் சேர்த்துக் கொள்வது ரத்த சோகை பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். மஞ்சளில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது. மேலும் மாங்கனீஸ், இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், காப்பர், மெக்னீசியம் போன்றவையும் மஞ்சளில் அடங்கியுள்ளன.
நீங்கள் மஞ்சளின் முழு ஆரோக்கிய நன்மைகளையும் பெற முடிவு செய்தால் கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட மஞ்சளை வாங்கி பயன்படுத்தாமல் அதற்குப் பதிலாக மஞ்சள் கிழங்கை வாங்கி அரைத்துப் பயன்படுத்தலாம்.