வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
9 கார்த்திகை 2024 சனி 03:14 | பார்வைகள் : 299
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த சூழலில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடந்த 6-ந் தேதி உருவாக வாய்ப்பு இருந்த நிலையில், மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சியால், வடகிழக்கு காற்றின் வருகை தடைப்பட்டு, தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது. இதற்கிடையே மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவி வந்த காற்று சுழற்சி வலு இழந்து, நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அதுகுறித்து வானிலை ஆய்வு மையம் நாளை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக் கடலில் உருவாகி, மேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி வரும் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக நாளை இரவில் இருந்து தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இதன்படி வருகிற 15-ந் தேதி வரை இந்த மழை பெய்யக்கூடும்.
அதிலும், வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும், தெற்கு, உள் மாவட்டங்கள் உள்ளிட்ட பிற பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரையிலும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.