அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவால் பயப்படாத ஒரே நாடு இந்தியா தான்
11 கார்த்திகை 2024 திங்கள் 03:54 | பார்வைகள் : 460
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளால் பல உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளன. ஆனால், இந்தியாவுக்கு அந்த பயம் இல்லை,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் மற்றும் அடுத்த அதிபராகவுள்ள டொனால்டு டிரம்ப் தேர்வு குறித்த கேள்விகளுக்கு அவர் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், முதலில் அவருக்கு வாழ்த்து கூறியது பிரதமர் நரேந்திர மோடிதான். அமெரிக்காவுடனான நம் உறவு மிகவும் சிறப்பாகவே இருந்து வருகிறது.
ஒபாமாவில் இருந்து, ஜோ பைடன், டிரம்ப் என, அனைத்து அதிபர்களுடனும், பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பான உறவு உள்ளது. உலக தலைவர்களை ஈர்க்கும் அவரது செல்வாக்கு மிகவும் பிரபலம். அவருடை இயற்கையான இந்த திறன், நம் நாட்டுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.
உள்நாட்டிலும் மிகப் பெரும் மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம். தொழில், வர்த்தகம், பொருளாதாரம் என, பல துறைகளிலும் நம் நாடு பெரிய முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது. இது உலகளவில், நம் நாட்டின் மீதான மரியாதையை அதிகரித்துள்ளது. இதனுடன், பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஈர்க்கும் சக்தி, உலக நாடுகளுடனான உறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்து, விவாதித்து, கேள்விகள் எழுப்பி, நம்முடைய கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப, நாட்டுக்கு நல்லது என்றால், அதில் எந்த தயக்கமும் இல்லாமல் முடிவு எடுப்பவர் பிரதமர் மோடி. அவருடன் தொடர்ந்து பேசும் வாய்ப்பில் இதை பார்த்து பிரமித்துள்ளேன். இதுவே, உலக நாடுகளின் தலைவர்களும் மோடி மீது அபிமானம் வைப்பதற்கு முக்கிய காரணமாகும்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானதும், பல உலக நாடுகள் கலக்கத்தில், அச்சத்தில் உள்ளன. ஆனால், இந்தியா அதில் ஒன்றாக இல்லை. மோடியை தன் நண்பர் என்றும், மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.