அரசு டாக்டருக்கு கத்திக்குத்து; வேலை நிறுத்தம் அறிவித்தது அரசு டாக்டர்கள் சங்கம்!
13 கார்த்திகை 2024 புதன் 09:03 | பார்வைகள் : 553
சென்னையில் அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு டாக்டர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி டாக்டரை 4 பேர் தாக்கியது தெரிய வந்தது.
அரசு டாக்டர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு டாக்டர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை அடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.