உடல் எடையுடன்தான் இருக்கிறேன்: எந்தப் பிரச்சனையும் இல்லை - சுனிதா வில்லியம்ஸ் விளக்கம்

14 கார்த்திகை 2024 வியாழன் 09:14 | பார்வைகள் : 2204
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் குறித்து வெளியான புகைப்படங்களுக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சூன் 6ஆம் திகதி புளோரிடா மாகாணத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய விண்வெளி வீரர்கள் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு பூமிக்கு திரும்பியது.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை பூமிக்கு பத்திரமாக மீட்டு வர பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் அதிர்ச்சி அளித்தது.
அந்த புகைப்படங்களில் உடல் மெலிந்து காணப்பட்டதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்தில் இருந்தபடி பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் தனது உடல்நலம் குறித்து கூறுகையில், "நான் அதே உடல் எடையுடன்தான் இங்கு உள்ளேன். என் உடல்நிலை சீராக உள்ளது. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மைக்ரோ ஈர்ப்பு உள்ளதால், உடலில் ஏற்படும் வழக்கமான மாற்றங்கள் காரணமாக எடை குறைந்தது போல் தெரிகிறது.
என் உடல்நிலையை தற்காத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகள் என்னை வலிமையாக்கி உள்ளன. முன்பை விட தற்போது நலமாக உள்ளேன். எனது உடல்நிலையில் எந்த விதமாற்றமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.