Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவின் கங்குவா படம் எப்படி இருக்கு ?

சூர்யாவின் கங்குவா படம் எப்படி இருக்கு ?

14 கார்த்திகை 2024 வியாழன் 09:42 | பார்வைகள் : 522


பிரம்மாண்டமான படம், பான் இந்தியா படம் என எடுக்க நினைத்தால் சரித்திர காலத்தை கதையாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், அது சம்பவங்களாக மட்டுமல்லாமல் ஒரு கதையாகவும் இருந்தால்தானே அந்த பிரம்மாண்டத்திற்கும், பான் இந்தியாவிற்கும் அர்த்தம் சேர்க்கும். தமிழில் முன்னணி கதாநாயகர்களை வைத்து சில கமர்ஷியல் படங்களை இயக்கிய சிவா பிரம்மாண்டமாக முயற்சிப்போம் என்று களத்தில் இறங்கியுள்ள படம்தான் இந்த 'கங்குவா'. களம் மட்டும் போதுமா இயக்குனரே கதையும் வேண்டுமல்லவா ?.

2024ல் சிறுவர் சிறுமியர்களை வைத்து நரம்பு மண்டலத்தில் ஏதோ மாற்றங்களைச் செய்து யாரோ ஒருவர் ஆராய்ச்சி செய்கிறார். அந்த ஆய்வுக் கூடத்திலிருந்து ஒரு சிறுவன் தப்பிக்கிறான். அவன் கோவாவில் இருக்கும் சூர்யாவைத் தேடிச் செல்கிறான். அந்த சிறுவனை அந்த ஆராய்ச்சி கூட ஆட்கள் மீண்டும் தூக்கிச் செல்ல வருகிறார்கள். அப்போது கதை 1070ம் ஆண்டுக்கு நகர்கிறது. ஐந்தீவு என்று அழைக்கப்படும் இடத்தில் பெருமாச்சி ஊரின் இளவரசனாய் இருப்பவர் சூர்யா. துரோகம் செய்த நட்டியை தீக்கிரையாக்கி தண்டனை கொடுக்கிறார். தங்கள் மகனை சூர்யா பார்த்துக் கொள்ள வேண்டும் என நட்டியின் மனைவியும் சொல்லிவிட்டு கணவருடன் தீக்குளிக்கிறார். அவருக்குக் கொடுத்த வாக்கை சூர்யா காப்பாற்றத் துடிக்கிறார். 1070ல் நடந்த சரித்திரக் கதைக்கும், 2024ல் நடக்கும் கதைக்கும் என்ன தொடர்பு என்பதுதான் இந்த 'கங்குவா' கதை.

பனி படர்ந்த மலைப் பிரதேசம், விதவிதமான அணிகலன், ஆடைகள் அணிந்த முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட மக்கள், அடிக்கடி சண்டைக் காட்சிகள் என உருவாக்கத்தில் மட்டும் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதை ரசிக்க முடியாமல் அந்தக் காட்சிகள் முழுவதும் இருட்டாகவே இருக்கிறது. 3 டியில் பார்த்தால் கூட கண்களை வருத்தி பார்க்க வேண்டி உள்ளது. அதையும் மீறி சூர்யாவின் ஆக்ரோஷமான நடிப்பு, ஆவேசம், வீரம் நம்மைக் கவர்கிறது. 1070களின் கதையில் வரும் கங்கா என்ற அந்த இளவரசனாக அதீத ஈடுபாட்டுடன் சூர்யா நடித்திருப்பது தெரிகிறது. அவ்வளவு முயற்சியும் வீணாகப் போய்விட்டதோ என்ற எண்ணம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

படத்தின் ஆரம்பத்தில் கோவா போலீஸ் கமிஷனரால் பிடிக்க முடியாத குற்றவாளிகளை பிடித்துக் கொடுக்கும் 'பவுண்ட்டி ஹன்ட்டர்' பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் இந்தக் கால சூர்யா. அவருடைய முன்னாள் காதலியும், இப்போதைய 'பவுண்ட்டி ஹன்ட்டர்' போட்டியாளராக திஷா பதானி. சூர்யாவுக்கு உதவியாளராக யோகி பாபு, திஷாவுக்கு உதவியாளராக ரெடின் கிங்ஸ்லி. கமிஷனராக கேஎஸ் ரவிக்குமார். எதற்காக இந்தக் காட்சிகள் படத்தின் ஆரம்பத்தில் இடம் பெற்றுள்ள என்பது புரியவில்லை. ஆரம்பத்திலேயே நமது பொறுமையை மிகவும் சோதிக்கின்றன. காமெடியாகவும் இல்லை, ஆக்ஷனாகவும் இல்லை. திஷா பதானி முகம் கூட நம் மனதில் பதிய மறுக்கிறது.

1070 கால கட்டத்தில் ஐந்தீவுகளில் ஒன்றான அரத்தி என்ற இடத்தின் மன்னன் ஆக பாபி தியோல். கங்குவா சூர்யாவையும் அவர்களது கூட்டத்தையும் பழைய பகையால் அழிக்கத் துடிக்கிறார். கண்களை வைத்து அவர்தான் பாபி தியோல் என நாம் அடையாளம் காண வேண்டியிருக்கிறது. ரோமாபுரி அரசன் தரும் தங்கத்திற்காக விலை போகும் ஐந்தீவு கூட்டத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட், சூர்யா கூட்டத்தைச் சேர்ந்த ஒருவராக கருணாஸ் ஆகியோர் மட்டுமே அடையாளம் தெரிகிறார்கள். அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் சூர்யா காப்பாற்றத் துடிக்கும் அந்த சிறுவன் குறிப்பிடும்படி நடித்திருக்கிறான்.

படத்திற்கான ஒளிப்பதிவு வெற்றி பழனிச்சாமி. இத்தனை கோடி செலவு செய்து, இவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படம் ஓரளவுக்காவது தெளிவாகத் தெரிய வேண்டாமா ?. 3 டி கண்ணாடியோடு பிரமிக்க வைக்கும் என்று எதிர்பார்த்தால் கண்கள் வலித்ததுதான் மிச்சம். தேவிஸ்ரீ பிரசாத் படத்தின் ஆரம்பத்தில் இசை என்ற ஓசையை ஆரம்பித்து வைத்து, அதை கடைசி வரை காப்பாற்றி இருக்கிறார். பல நேரங்களில் அது இரைச்சலாக காதுகளுக்கு வலியை வரவழைத்துவிடுகிறது.

சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட். படத்திற்காக அவரும் அவருடைய குழுவினரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனுவர்தன், தட்ஷா பிள்ளை ஆகியோரது ஆடை அலங்காரம் அந்தக் காலத்து காட்சிகளில் கவனம் பெறுகிறது. எதையெதையோ சேகரித்து அலங்காரம் செய்துள்ளார்கள்.

பிரம்மாண்டம், உருவாக்கம், 3 டி திரையிடல் அவை எல்லாம் சரி. ஒரு படத்திற்கு அவை மட்டும் போதுமா ?. படத்துடன் நம்மை ஒன்ற வைக்கும் விஷயம் ஒன்றாவது இருக்க வேண்டுமே ?. அப்படி இந்தப் படத்தில் சொல்லும்படி இல்லாமல் போவது பெரும் ஏமாற்றம். சூர்யா மட்டும் தன் தோள்களில் இரண்டரை மணி நேரப் படத்தை எப்படி தாங்கி நிற்க முடியும் ?.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்