Paristamil Navigation Paristamil advert login

உலகின் வறண்ட பகுதியில் பூக்கும் மலர்கள்

உலகின் வறண்ட பகுதியில் பூக்கும் மலர்கள்

15 கார்த்திகை 2024 வெள்ளி 10:58 | பார்வைகள் : 136


உலகின் வறண்ட பாலைவன பகுதியில் பூக்கள் பூத்து குலுங்கியுள்ளது.

தென் அமெரிக்காவின் வடக்கு சிலியில் 1,05,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுவது அட்டகாமா பாலைவனம். 

உலகின் மிக வறண்ட பாலைவனமாக அட்டகாமா பாலைவனம் உள்ளது. அட்டகாமா பாலைவனத்தின் நிலப்பகுதி மிகவும் தனித்துவமானது.

காற்றினால் செதுக்கப்பட்ட பாறை வடிவங்கள், பரந்த மணல் திட்டுகள் இருப்பதால் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பைப்போல காட்சி அளிக்கும் அட்டகாமா பாலைவனத்தை, நாசா அதன் செவ்வாய் ரோவர்களுக்கான சோதனைக் களமாக பயன்படுத்தி வருகிறது. 

1570 முதல் 1971 வரை அட்டகாமா பாலைவனத்தில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. 1971 ஆம் ஆண்டுக்கு பிறகே மழை பெய்தது. இதே போல் அரிதாக எல் நினோ நிகழ்வின் காரணமாக மழை பெய்யும் போதெல்லாம், பாலைவனம் ஊதா நிற மலர்களால் பூத்து குலுங்குகிறது.

பூமியின் வறண்ட பகுதியாக இருந்தாலும், இங்கு சில கடினமான தாவரங்கள், பாசிகள் மற்றும் சில விலங்குகள் 'கமன்சாகா' மூலம் உயிர் வாழ்கின்றன. கமன்சாகா என்பது கடலோர மூடு பனி ஆகும். பசிபிக் பெருங்கடலில் இருந்து வீசும் மூடுபனி, அட்டகாமா பாலைவனத்திற்கு சற்று ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. 

வறண்ட பாலைவன பகுதியாக இருந்தாலும், அதிகாலை சூரிய உதயத்தின் போது, அட்டகாமா பாலைவனத்தில், எல் டாட்டியோ கீசர்ஸ் என்று அழைக்கப்படும் வெந்நீர் ஊற்றுகள் தரையிலிருந்து எழுவதை காணலாம்.

அட்டகாமா பாலைவனத்தின் சில பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவு பதிவாகிறது. கடைசியாக, இந்த ஆண்டு ஜூலை அட்டகாமா பாலைவனம் பூக்களால் நிறைந்து காட்சி கொடுத்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்