Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க.,வுக்கு டாஸ்மாக் சம்மேளனம் எச்சரிக்கை

தி.மு.க.,வுக்கு டாஸ்மாக் சம்மேளனம் எச்சரிக்கை

17 கார்த்திகை 2024 ஞாயிறு 03:28 | பார்வைகள் : 2996


தஞ்சாவூரில், டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின், மாநில குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலர் திருச்செல்வன் கூறியதாவது:

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை, 20 ஆண்டுகளாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அ.தி.மு.க.,வும் நிறைவேற்றவில்லை; ஆளும் தி.மு.க.,வும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த அரசுக்கு, எங்கள் கோரிக்கைகளை பலமுறை கொண்டு சென்றும், நிறைவேற்ற மறுக்கிறது.

முதல்வர் சட்டசபை தேர்தலின் போது, தமிழகத்தில், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என, மக்களிடையே வாக்குறுதி அளித்தார்.

ஆட்சிப் பொறுப்பேற்றதும், 500 டாஸ்மாக் கடைகளை மூடியதை வரவேற்கிறோம். ஆனால், அரசு கடைகளை மூடிவிட்டு, தனியாருக்கு மனமகிழ்மன்றம் என்ற வகையில் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, அரசு செய்யும் வியாபாரத்தை தனியாருக்கு மடை மாற்றும் போக்கு நடைபெறுகிறது.

கணினி ரசீது முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதிலும், பல பிரச்னைகளை ஊழியர்கள் சந்திப்பதால், மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியிட மாற்றம், பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.

ஆளுங்கட்சி தலையீடு இருக்கிறது. டாஸ்மாக் கடை ஊழியர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டி, மாமூல் வசூலிக்கும் போக்கு, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இவர்கள் மீது தி.மு.க., தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்