எதிர்பார்த்த வசூலை எட்டியதா கங்குவா?
17 கார்த்திகை 2024 ஞாயிறு 12:46 | பார்வைகள் : 145
பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, இந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகை நிஷா பாட்னி இந்த திரைப்படத்தின் மூலம் தனது கோலிவுட் பட என்ட்ரியை கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இந்த திரைப்படத்திற்காக சூர்யா செலவிட்ட நிலையில், இந்த திரைப்படம் உலக அளவில் 2000 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்யும் என்று பட குழு மிகுந்த நம்பிக்கை தெரிவித்து இருந்தது. இந்த சூழலில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி உலக அளவில் இறுதியாக திட்டமிட்டவாரு கங்குவா திரைப்படம் வெளியானது. இந்த சூழலில் நேற்று முதல் நாள் வசூலாக உலக அளவில் சுமார் 56.32 கோடி ரூபாயை கங்குவா திரைப்படம் வசூல் செய்திருந்தது.
கங்குவா படத்தை பார்த்த சினிமா விரும்பிகள் படத்தின் தொய்வுக்கு பல காரணங்களை முன்வைத்தாலும், சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் கங்குவா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. ஒட்டுமொத்த திரைப்படத்தையும் சூர்யா தனி ஆளாக தன்னுடைய தோளில் சுமந்து சென்றிருப்பதாகவும், ஆனால் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையை தான் திரைப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது என்றும், அதே போல சிறுத்தை சிவாவின் திரைக்கதை இன்னும் சற்று நேர்த்தியாக செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் கங்குவா திரைப்படத்தின் இரண்டாவது நாள் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் தற்பொழுது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிறீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி கங்குவா திரைப்படம் உலக அளவில் வெளியான இரண்டாவது நாளில் சுமார் 89.32 கோடி ரூபாய்கள் வசூல் செய்திருக்கிறது. ஆனால் பல மேடைகளில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கங்குவா திரைப்படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் தாண்டி வசூல் செய்யும் என்றும், ஒட்டுமொத்தமாக உலக அளவில் 2000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த 2000 கோடி என்பது இப்பொழுது சாத்தியமாகுமா என்கின்ற கேள்வி எழுந்திருக்கிறது