Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சீரற்ற காலநிலை - ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

இலங்கையில் சீரற்ற காலநிலை - ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

12 ஐப்பசி 2024 சனி 15:42 | பார்வைகள் : 1682


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, நிவாரண சேவைகளை வினைத்திறனாக அமுல்படுத்துவதற்கு தேவையான உதவியை வழங்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

அனர்த்தங்களால் மக்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த நிவாரண சேவைகளுக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு நிதியமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உரிய நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவதற்கு நன்கு ஒருங்கிணைந்து செயற்படுமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு மேலும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 6,018 குடும்பங்களைச் சேர்ந்த 24,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

584 குடும்பங்களைச் சேர்ந்த 2,200 பேர் பாதுகாப்பாக 23 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தின் ஊடாக அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அழைப்பு அறை 117 மற்றும் 0112 136 136, 0112 136 222, 0112 670 002 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் அவசர நிலைமைகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்