பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட இளைஞன் கைது!
13 ஐப்பசி 2024 ஞாயிறு 15:05 | பார்வைகள் : 2753
பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட 22 வயதுடைய ஒருவரை பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான் குடியுரிமை கொண்ட ஒருவரே கடந்த செவ்வாய்க்கிழமை Haute-Garonne நகரில் வைத்து கைது செய்யப்பட்டு, நேற்று ஒக்டோபர் 12, சனிக்கிழமை பரிசில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர், பரிசில் உள்ள உதைப்பந்தாட்ட மைதானம் ஒன்றிலும், வணிக வளாகம் ஒன்றிலும் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அமெரிக்காவில் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்ட குழுவினரோடு குறித்த நபருக்கு தொடர்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவரின் சகோதரர் ஒருவர் அந்த அமெரிக்க குழுவில் இருப்பதாகவும், டெலிகிராம் செயலியூடாக இருவரும் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செப்டம்பர் 27 ஆம் திகதி அமெரிக்க உளவுத்துறையினர் பிரெஞ்சு பயங்கரவாத தடுப்புப்பிரிவினருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அதை அடுத்தே அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது சம்பவம் இடம்பெற்ற போது மேலும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு - பின்னர் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.