Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாளில் 20 செ.மீ., மழை பெய்யும்! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

ஒரே நாளில் 20 செ.மீ., மழை பெய்யும்! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

13 ஐப்பசி 2024 ஞாயிறு 15:06 | பார்வைகள் : 175


சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பினாலும், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இந் நிலையில், மழை பற்றிய முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ளது. அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, வரும் 14ம் தேதி, தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எதிரொலியாக 5 நாட்கள் மழை நீடிக்கும்.

தமிழகத்தில் நாளை (அக்.14) அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அக்டோபர் 15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 16ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை (204.மி.மீ) பெய்யக்கூடும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே நிருபர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது;

சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரித்து பெய்யத் தொடங்கும். நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை விலகி, வரும் 15 மற்றும் 16ம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது. இம்முறை 5 நாட்களுக்கு முன்னதாகவே வட கிழக்கு பருவமழை தொடங்குகிறது.

அரபிக்கடல், வங்கக்கடலில் உள்ள 2 நிகழ்வுகளால் கனமழை தொடரும். மழை தொடர்பான அனைத்து தகவல்களும் அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்