மாஜி அமைச்சர் சுட்டுக்கொலை; தலைவர்கள் கண்டனம்; மஹாராஷ்டிராவில் பதட்டம்
13 ஐப்பசி 2024 ஞாயிறு 15:07 | பார்வைகள் : 757
மஹா., முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை கொலை செய்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என மஹா., முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதி அளித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்கை நேற்று(அக்.,12) இரவு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை விடக்கூடாது என மஹா., முன்னாள் முதல்வர்கள் சரத்பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குற்றவாளி மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மஹா., முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதி அளித்தார். மேலும், அவர், '' பாபா சித்திக் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது வருத்தம் அளிக்கிறது. போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள், குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் கமிஷனர் என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
துணை முதல்வர் அஜித் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மஹா., துணை முதல்வருமான அஜித் பவார், தனது கட்சித் தலைவர் கொல்லப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்தார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறிருப்பதாவது:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், சட்டசபையில் நீண்ட காலம் பணியாற்றிய பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
கண்டனத்துக்குரியது, வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் நான் ஒரு நல்ல சக ஊழியரையும், ஒரு நண்பரையும் இழந்துள்ளேன். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களும். முழுமையான விசாரணை நடத்தப்படும். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கைது செய்யப்படுவார். இவ்வாறு அஜித் பவார் கூறியுள்ளார்.
குற்றவாளி பின்னணி தகவல்!
மஹா.,வில் தசரா விழாவில், சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான பாபா சித்திக்கை 3 நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அதில் இருவர் கைது செய்யப்பட்டனர், மூன்றாவது நபர் தப்பி ஓடிவிட்டார்.
இந்த வழக்கை இரண்டு வெவ்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் தாங்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கண்டனம்
இது குறித்து, சமூகவலைதளத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், ' மஹா., முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் சோகமான மறைவு வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதி உறுதி செய்யப்பட வேண்டும். தற்போதைய மஹாராஷ்டிரா அரசு முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; ராகுல் குற்றச்சாட்டு
இது குறித்து, சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாபா சித்திக்கின் மோசமான மரணம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில், எனது எண்ணங்கள் முழுவதும் அவரது குடும்பத்தை பற்றியே உள்ளது.
மஹாராஷ்டிராவில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை இந்த பயங்கரமாக சம்பவம் எடுத்துரைக்கிறது. இந்த சம்பவத்திற்கு மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். நீதி வெல்ல வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.