மும்பையை நடுங்க வைக்கும் கூலிப்படை...: யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்!
13 ஐப்பசி 2024 ஞாயிறு 15:11 | பார்வைகள் : 1208
மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. சிறையில் இருந்தபடியே கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதும், அவனுக்கு ஆதரவாக 700 பேர் துப்பாக்கி ஏந்திய கூலிப்படை இருப்பதும் தெரியவந்துள்ளது.
மும்பையில் காலம் காலமாகவே ரவுடிகள் அட்டகாசம் அதிகம். சிறு கிரிமினல்களிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, அனைத்து தொழில் துறையினரும், ஏதாவது ஒரு ரவுடியிடம் அடைக்கலம் தேடி செல்கின்றனர். அரசியல்வாதிகளும் தங்களுக்கு வேண்டாதவர்களுக்கு இடையூறு செய்வதற்காக குற்றவாளிகளை தேடிச் செல்கின்றனர்.
அட்டகாசம்
இப்படித்தான் மும்பையில் குண்டர்களின் ராஜ்ஜியங்கள் உருவாகின. ஆரம்பத்தில் ஏழ்மை மிகுந்த பகுதிகள், மார்க்கெட்டுகளில் மட்டுமே செயல்பட்டு வந்த குண்டர்களும், ரவுடிகளும், காலப்போக்கில், சினிமா, அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் நுழைந்து அட்டகாசம் செய்யத் தொடங்கினர்.
இப்படி அட்டகாசம் செய்யும் ரவுடிகளை, தங்களுக்கு வேண்டாதவர்கள் கதையை முடிக்க, மர்ம நபர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அப்படித்தான் இப்போது மும்பையில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலையில், சிறையில் உள்ள பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளதை மும்பை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். நாடு முழுவதும் நெட்வொர்க் அமைத்து செயல்படும் பிஷ்னோய் தலைமையில் 700 பேர் கொண்ட கூலிப்படை இருக்கிறது. இவர்கள் அனைவரும், பணத்துக்காக எத்தகைய குற்றங்களில் ஈடுபடவும் தயங்காதவர்கள்; கும்பலில் அனைவரும் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
யார் இந்த பிஷ்னோய்
கடந்த 1993ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த லாரன்ஸ், 2010 வரை அபோஹர் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளான். பிறகு அங்கிருந்து சண்டிகர் சென்று டிஏவி கல்லூரியில் படித்துள்ளான். 2011ல் பஞ்சாப் பல்கலை மாணவர் கவுன்சில் அமைப்பில் இணைந்தான். அப்போது பிரபல ரவுடியான கோல்டி பிரார் ( தற்போது இவன் வெளிநாட்டில் பதுங்கி உள்ளான்) பழக்கம் கிடைத்தது.இதன் மூலம் பல்கலை அரசியலில் லாரன்ஸ் பிஷ்னோய் ஈடுபட்டதுடன், கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட துவங்கி உள்ளான்.
இவன், மீது கொலை, ஆட்கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. ஆனால், ஊழலில் சிக்கிய அரசியல்வாதிகளை போல், லாரன்ஸ் பிஷ்னோயும் இந்த வழக்குகளில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது எனக்கூறி வருகிறான். தற்போது, பல வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளான். சிறையில் இருந்தபடியே தனது கூட்டணியையும், ஆதிக்கத்தையும் விரிவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளான்.
வழக்குகள் நிலுவை
சண்டிகரில் 2010 முதல் 2012 வரை கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிஷ்னோய் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 4 ல் விடுதலை செய்யப்பட்டான். எஞ்சிய 3 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது.
ஆயுத கடத்தல்
2013ம் ஆண்டு, பஞ்சாபில் உள்ள முக்த்சர் அரசு பல்கலை தேர்தலில் வெற்றி பெற்ற மாணவரை லாரன்ஸ் பிஷ்னோய் சுட்டுக்கொன்றான். அப்போது, பஞ்சாபில் அவன் பரபரப்பாக பேசப்பட்டார். இவனது தலைமையின் கீழ் செயல்படும் ரவுடிகள் கொலை சம்பவங்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், மது பார் விவகாரத்தில் தலையிடுவது, ஆயுத கடத்தல், கொலைகார்களுக்கு அடைக்கலம் கொடுப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இது, அம்மாநில போலீசாருக்கு பெரிய தலைவழியை கொடுத்தது.
கடந்த 2014ம் ஆண்டில் ராஜஸ்தான் போலீஸ் என்கவுன்டரில் லாரன்ஸ் பிஷ்னோய் தப்பி விட்டான். ராஜஸ்தானின் பாரத்பூர் சிறையில் இருக்கும் போது தான் இவனுக்கு ஜஸ்விந்தர் சிங் என்ற ரவுடியின் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. மேலும், சிறை அதிகாரி உதவியுடன் தனது சிண்டிகேட்டை மேலும் விரிவுபடுத்தி உள்ளான். பிறகு 2021ம் ஆண்டு மஹாராஷ்டிரா குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் இவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவனை டில்லி திஹார் சிறைக்கு போலீசார் மாற்றினர்.
காலிஸ்தான் தொடர்பு
என்ஐஏ விசாரணையில் லாரன்ஸ் பிஷ்னோய்க்கும் கோல்டி பிராருக்கும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கும் என தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்து உள்ளது. இதனையடுத்து இவர்கள் மீதான வழக்கு விசாரணையை விரிவுபடுத்தும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் உள்ள சம்பத் நெஹ்ரா என்பவன் சல்மான் கானை அவரது வீடருகே கொலை செய்ய முயற்சி செய்து பிடிபட்டான். குற்றத்தை ஒப்புக்கொண்ட இவன், நீதிமன்ற விசாரணையின் போதும், ஜோத்பூரில் சல்மான் கானை சுட்டு கொல்வோம் என மிரட்டல் விடுத்தான்.
கடந்த ஆண்டு, மும்பை பந்த்ரா பகுதியில் சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் லாரன்ஸ் கும்பலுக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்தது.