Paristamil Navigation Paristamil advert login

இடி, மின்னல்,காற்றுடன் மழை: வெளியே வர வேண்டாம்

இடி, மின்னல்,காற்றுடன் மழை: வெளியே வர வேண்டாம்

16 ஐப்பசி 2024 புதன் 06:27 | பார்வைகள் : 147


இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், இன்று வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என, எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஒன்பது மாவட்டங்களுக்கு, 'ரெட் அெலர்ட்' கொடுக்கப்பட்டு, நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொட்டி தீர்த்த கன மழையால், சென்னை சாலைகளில் தேங்கிய நீரில் தள்ளாடியபடியே வாகனங்கள் பயணித்தன. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் துவக்கமே அதிரடியாக உள்ளது. நடப்பாண்டு இயல்பை விட, அதிக மழை பெய்யும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்த போதிலும், இவ்வளவு மழையை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்த சூழலில், இன்று அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையமும், 'பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; வெளியே வர வேண்டாம்' என்று, பேரிடர் ஆணையமும் எச்சரித்துள்ளன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கி, வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்து, வெளியேற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மெட்ரோ ரயில், மழைநீர் கால்வாய் கட்டுமான பணிகள் காரணமாக, ஏற்கனவே சாலைகள் சேதமடைந்திருந்தன.

வடசென்னையின் பிரதான சாலையான ஜி.என்.டி., சாலையில், வியாசர்பாடி ரயில்வே சுரங்க பாலம் மூழ்கியது. அங்கு நீரை அகற்ற போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல பிரதான சாலைகளில் மரங்களும் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இன்று இடி, மின்னல், காற்றுடன் கனமழை கொட்டும் என்பதால், வீட்டை விட்டு வெளியே வராமல், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு முழு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று, வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

கனமழையை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை விடப்படுகிறது. இம்மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான போலீஸ், தீயணைப்பு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பால்வளம், குடிநீர் வழங்கல், மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வங்கிகள் இயங்கும். காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், மேம்பால ரயில், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஓட்டல்கள், உணவகங்கள் வழக்கம் போல இயங்கும்.

கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படும். அதிக கனமழையை எதிர்பார்ப்பதால், சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள், மிக குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தோ பணியாற்றும்படி அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.


ஐகோர்ட்டுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை உயர்நீதிமன்ற தலைமைப்பதிவாளர் எஸ். அல்லி வெளியிட்டுள்ளார்.

கனமழை கொட்டித் தீர்க்க காரணம் என்ன?

''காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் இணைந்த நிலையில் உருவான, வளி மண்டல மேலடுக்கு சுழற்சியே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்க காரணம்,'' என, தன்னார்வ வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல நகர துவங்கியுள்ளது. இது கரையை நெருங்கும் போது தான் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுக்கு முன்னதாகவே, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், 15 செ.மீ., வரை கன மழை கொட்டி தீர்த்துள்ளது. இதில், வழக்கத்துக்கு மாறாக காற்றழுத்த தாழ்வு நிலையுடன் இணைந்த நிலையில், வங்கக் கடலின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. மேற்கில் இருந்து சேர்ந்த காற்றின் தாக்கம் காரணமாக, இந்த சுழற்சி கன மழையாக கொட்டி தீர்த்துள்ளது. அதே நேரம், காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, தமிழக கரையை நெருங்கும் போது, அதிகன மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதன்படி இன்று பிற்பகல் முதல், நாளை காலை வரையிலான காலத்தில், பல்வேறு இடங்களில், 25 முதல் 30 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழையை தீவிரப்படுத்தும் இந்த நிகழ்வு, கரையை கடக்கும் நிலையில் வலுவிழக்கவும் வாய்ப்புள்ளது. இதில் மாலை, இரவு, அதிகாலை நேரத்தில் தான் அதிக மழைக்கான வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.***


பாம்பு வந்தால் வனத்துறையை கூப்பிடுங்க

தமிழக வனத்துறை அறிவிப்பு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில், வீடு மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் நுழைய வாய்ப்புள்ளது. இது குறித்து புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க, வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில், வனத்துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். எனவே, வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வந்தால், சென்னையில் இருப்பவர்கள், 1903 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, மதுரை மாவட்டத்தில் வசிப்போர், அந்தந்த மாவட்ட கட்டுப்பாட்டு அறையை, 1077 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்