அனிருத் அசுர வளர்ச்சி அடைந்தது எப்படி?
16 ஐப்பசி 2024 புதன் 14:20 | பார்வைகள் : 1039
இசையமைப்பாளர் அனிருத் கடந்த 1990-ம் ஆண்டு நடிகர் ரவி ராகவேந்திராவுக்கும், நடன கலைஞர் லட்சுமிக்கும் மகனாக பிறந்தார். அவரது தந்தை ராகவேந்திரா ரஜினியின் படையப்பா உள்ளிட்ட சில படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ரஜினிக்கும் ரகாவேந்திராவுக்கும் என்ன தொடர்பு தெரியுமா... ரஜினியின் மனைவி லதாவின் சகோதரர் தான் இந்த ராகவேந்திரா. அனிருத்தின் தாத்தா எஸ்.வி ரமணன் ஆவணப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் இசையமைப்பில் சிறந்து விளங்கி இருந்தார்.
அனிருத்தின் கொள்ளுத்தாத்தா இயக்குனர் கே.சுப்ரமணியம். 1930களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர். பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் தான் அனிருத்தின் பள்ளிப்படிப்பு தொடங்கியது. இளம் வயதிலேயே பள்ளியில் பீப்புள் லீடராக தேர்வு செய்யப்பட்ட அனிருத், அவ்வப்போது பியானோக்களை வாசிக்க ஆர்வம் காட்டினாராம். பின்னர் இசைப்பயிற்சி கூடத்தில் சேர்ந்த அனிருத், அங்கே பியானோவோடு, இதர இசைக் கருவிகளையும் வாசிக்க கற்றுக்கொண்டிருக்கிறார்.
பள்ளியில் கர்நாடிக் பியூசன் இசைக்குழுவில் ஒரு அங்கமாக இருந்த அனிருத், லயோலா கல்லூரியில் சேர்ந்த பின்னர், தன் நண்பர்களுடன் இணைந்து ராக் வகை இசையை அதிகம் வாசித்து பழகியிருக்கிறார். கர்நாடக இசையை கற்றுக்கொண்ட அனிருத்துக்கு கிளாசிக்கல் பியானோவை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. இதற்காக லண்டனில் உள்ள ட்ரினிட்டி இசை கல்லூரி நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
பள்ளி மற்றும் கல்லூரியில் இசைக்குழுவுடன் இசையமைத்துக் கொண்டிருந்த அனிருத்தை சினிமாவின் பக்கம் திருப்பியது நடிகர் தனுஷ் தான். கல்லூரி பருவத்திலேயே அனிருத்துக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது. இதனால் அப்படத்தின் மூலம் பெரிய இசையமைப்பாளர் ஆகிவிட வேண்டும் என்கிற கனவோடு இருந்த அனிருத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் இசையமைக்க இருந்த முதல் படம் பாதியிலேயே நின்று போனது. முதல் படமே இப்படி ஆனதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் அனிருத்.
இதையடுத்து 25 சுயாதீன இசை பாடல்களுக்கு இசையமைத்து பட வாய்ப்புக்காக காத்திருந்த அனிருத்துக்கு குடும்பத்தில் இருந்தே முதல் வாய்ப்பு கிடைத்தது. தான் நடித்த 3 படத்துக்கு அனிருத்தை இசையமைக்க வைக்கலாம் என தனுஷ் சிபாரிசு செய்ய அதற்கு அப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஓகே சொல்லி இருக்கிறார்.
காதல் தோல்வியால் துவண்டு இருக்கும் இளைஞர் பாடும் பாடல் ஒன்றை தனுஷின் குரலில் அனிருத் முதன்முதலில் கம்போஸ் செய்திருக்கிறார். அனிருத் ட்யூனை போட அதற்கு ஏற்றார் போல் ஆங்கிலமும் தமிழும் கலந்து பாடல் வரிகளை அடுக்கினார் தனுஷ். வெறும் 20 நிமிடத்திலேயே மொத்த பாடல் கம்போஸிங்கையும் முடித்திருக்கிறார் அனிருத். ஆனால் அப்போது அவர்களுக்கு தெரியவில்லை அந்த பாடல் உலகளவில் மெகா ஹிட் அடிக்கும் என்று.
3 படத்திற்காக அனிருத் இசையமைத்த முதல் பாடல் அதிகாரப்பூர்வமாக இல்லாமல் இணையத்தில் லீக் ஆனது. அப்படி வெளியான சில நாட்களிலேயே இளசுகள் மத்தியில் அப்பாடல் வைரல் ஆக ஆரம்பித்தது. இதனை அறிந்த படக்குழு அந்த ஒரு பாடலை மட்டும் ஒய் திஸ் கொலவெறி என்கிற பெயரில் வெளியிட்டனர். அதுமட்டுமின்றி அதன் மேக்கிங் வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டனர்.
வெளியிட்ட ஒரே நாளில் உலகமெங்கும் பிரபலமானது ஒய் திஸ் கொலவெறி பாடல். அதற்காக அன்றைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனுஷை அழைத்து விருந்து வைத்த சம்பவமும் அப்போது அரங்கேறியது. ஆனால் மறுபுறம் இந்த பாடலுக்கு விமர்சனங்களும் எழுந்தன. தமிழ் பாடல்களில் தமிழ் வார்த்தைகளின் உபயோகம் குறைந்ததால் தனுஷின் இந்த தமிழ் கொலை புதிய டிரெண்டை உருவாக்கி இருப்பதாக குற்றம்சாட்டினர்.
விமர்சனங்கள் பல இருந்தாலும் ஒய் திஸ் கொலவெறி மட்டுமல்லாது 3 படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. ஒரு பாடல், இரண்டு பாடல் என இல்லாமல் முழு ஆல்பமும் ஹிட் கொடுக்க வேண்டும் என்பதே அனிருத்தின் ஆசை. அது 3 மற்றும் எதிர்நீச்சல் படம் மூலம் சாத்தியமானது. பின்னர் டேவிட் படத்திற்காக அனிருத் இசையமைத்த கனவே கனவே என்கிற பாடல் அவரை இந்தியிலும் பிரபலமாக்கியது.
அதன்பின்னர் வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, கத்தி, மாரி, வேதாளம், பேட்ட, தர்பார், மாஸ்டர், பீஸ்ட், லியோ, ஜெயிலர், ஜவான் என தொடர்ந்து ஹிட் ஆல்பங்களாக கொடுத்து இன்று கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பான் இந்தியா அளவில் முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளார் அனிருத்.
புதுப்புது பாடகர்களை அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி கேஜே யேசுதாஸ், தேவா, ஜானகி என பல இசை ஜாம்பவான்களையும் கம்பேக் கொடுக்க வைத்து பாராட்டுக்களை பெற்றார் அனிருத். இவரின் குரல்வளத்தால் இம்பிரஸ் ஆன இதர இசையமைப்பாளர்களும் அனிருத்தை தங்கள் இசையில் பாட வைத்தனர். ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, தமன், டி இமான் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி உள்ளார் அனிருத்.
புகழின் உச்சிக்கு சென்றால் சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம் தான். அப்படியான சர்ச்சை கழுகுகள் அனிருத்தையும் வட்டமடித்தன. குறிப்பாக சிம்புவுடன் சேர்ந்து சென்சார் செய்யப்பட்ட பாடல் வரிகளை கொண்டு சிம்புவுடன் சேர்ந்து அவர் உருவாக்கிய பீப் சாங் அவருக்கு தலைவலியாக மாறியது. பின்னர் சுச்சி லீக்ஸிலும் சிக்கினார் அனி. அனிருத் ஒழுக்கம் கெட்டவர் என வசைபாடியவர்களுக்கு தன்னுடைய பாடல்களின் வெற்றி மூலம் பதிலடி கொடுத்தார்.
தந்தை ராகவேந்திரா, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ஆகியோரின் உதவியால் தான் அனிருத் இந்த இடத்திற்கு சுலபமாக வந்துவிட்டதாக பேச்சும் உண்டு. ஆனால் அப்படி சினிமா பின்புலத்தில் இருந்து வரும் அனைவரும் அனிருத் அளவிற்கு வளர்ந்துவிட்டார்களா என்பது கேள்விக்குறியே... எத்தனை சினிமா வாரிசுகள் வந்தாலும் திறமையும், தொழிலில் நேர்மையும் இருந்தால் மட்டுமே மக்கள் அவர்களை அங்கீகரிப்பார்கள். இதனை உணர்ந்ததால் தான் அனிருத் இன்று உச்சத்தில் இருக்கிறார்.