Paristamil Navigation Paristamil advert login

ஓய்வில்லா உழைப்பாளி

ஓய்வில்லா உழைப்பாளி

16 ஐப்பசி 2024 புதன் 14:55 | பார்வைகள் : 1622


வெள்ளி வான மேடையிலே
தொங்கும் மின்னல் தோரணங்கள்
போர் சங்கு முழக்கமிட்டு
மேகக்கூட்டம் புடைசூழ
இடிமேள சப்தத்துடன்
சூறைக்காற்றை தூதனுப்பி

தள்ளி சாய்த்த பாறை மீதும்
பிய்த்து எறிந்த கூரை மீதும்
அள்ளி வந்த நீரையெல்லாம்
அட்சதையாய் தூவிவிட!!!

சொப்பன காட்சியெல்லாம்
ரத்தான சோகத்திலே
ஒப்பனை கலைத்துவிட்டு
விண்மீன்கள் விழிமூட

ஓய்வில்லா பேரலையின்
ஒய்யாரக் கூச்சலிலே
திக்கு திசை மாறிபோன
கரைசேரா கட்டுமரம்
நிறைவேறா ஆசையுடன்
தென்னந்தீவில் தேங்கிநிற்க

நிலைகுத்தி நின்றிருந்த
நூற்றாண்டு விருட்சங்கள்
தலைசுற்றி போகும்வரை
ஆடிப்பாடி அசந்திருக்க

மின்வெட்டில் கண்ணிழந்த
சாலையோர தெருவிளக்கும்
தொண்டைகட்டில் ஓய்ந்திருந்த
சுவர்கோழி கீறலும்

பழுதடைந்து பாதிநின்ற
தானியங்கி எந்திரமும்
நடுச்சாம குறிசொல்லும்
கோடாங்கி மந்திரமும்

ஊரடங்கின் நகலான
ஆளில்லா முச்சந்தியும்
நள்ளிரவின் ஆழத்தினை
பேய்மழையின் வீரத்தினை
கதிகலங்கி உணர்ந்திருக்க

கனம் தீர்ந்த நிம்மதியில்
கார்மேகம் களைத்துவிட
மனம் சோர்ந்த நிலவொளியோ
இடை இடையே ஊடுருவ

குழந்தை சுமக்கும் புத்தகமூட்டையாய்
மழைத்துளி சுமந்தன இலைகள்
தேன்சுவைக்கும் தென்றல்காற்றில்
மேனியெங்கும் மெய்சிலிர்க்க

அயர்ந்து உறங்கின குருவிகள்
உறைந்து நின்றன அருவிகள்
நிசப்த ஓசை மட்டும்
ஓங்கி ஒலித்திருக்க

ஊரெல்லாம் உறங்க நான் மட்டும் ஓடட்டுமா?
விடிய விடிய முணங்கிய கடிகாரத்தின் கூக்குரல்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்