"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" - இன்று உலக உணவு தினம்
16 ஐப்பசி 2024 புதன் 15:08 | பார்வைகள் : 535
'பசி வந்தால் பறக்க வேண்டாம்... யானைகளை கொன்று நாங்களே தருகிறோம் சாப்பிடுங்கள்'' என ஒரு நாட்டின் அரசே இன்று சொல்கிறதென்றால், மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான உணவின் நிலை இன்று எப்படி இருக்கிறது என்பதனை யோசிக்கவே அச்சமாக உள்ளது.
கடந்த மாதம் ஊடகங்களில் வெளியான ஒரு செய்தி பார்ப்பவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தாமல் இருக்காது. மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், யானை, வரிக்குதிரை, நீர்யானை, எருமை என 100க்கும் மேற்பட்ட விலங்குகளை கொன்று மக்களுக்கு உணவாக இறைச்சியை வழங்கிட தென்ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியா முடிவு செய்துள்ளமையே அந்த செய்தி. இது எத்தனை கொடூரம்!
அடுத்த வேலை உணவுக்கு என்ன சாப்பிடலாம் என்று யோசிப்பவர்கள் இருக்கும் இதே பூமியில் தான் இந்த வேலை உணவுக்கு ஏதாவது கிடைக்காதா என வயிறு சுருங்கி பசியால் துடிக்கும் மனிதர்களும் உளர்.
உயிர் வாழ்வதற்கு அடிப்படையான உணவின்றி ஒருவர் உயிரிழந்தால் எத்தனை கொடுமை! இதனால்தான், இந்த பூமியில் ஒருவருக்கு உணவு இன்றேல் ஜெகத்தினை அழிப்போம் என்றான் பாரதி. அப்படி பார்த்தால் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் மக்கள் உணவின்றி உயிரிழக்க நேரிடுகிறதே, நாம் என்ன செய்வது?
இதனால்தான் உலகம் முழுவதும் வாழும் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து சேர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக உணவு தினம் ஒக்டோபர் 16ஆம் திகதியான இன்றைய நாள் கடைபிடிக்கப்படுகிறது.
உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் 1945இல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு FAO (Food and Agriculture Organization) இந்த நாளில் உருவானது.
தொடர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு 1979இல் இந்த அமைப்பின் மாநாட்டில் உலக உணவு தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, 150க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து உலக உணவு தின கொண்டாட்டத்தை அங்கீகரித்தன. உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்து பசியை எதிர்த்துப் போராடுவதும் உலக உணவு தினத்தின் முதன்மை நோக்கமாக கருதப்படுகிறது.
1981ஆம் ஆண்டு முதல் உலக உணவு தினம் ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளை கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான கருப்பொருள்கள் விவசாயத்தைச் சுற்றியே உருவாக்கப்படும். ஏனெனில், விவசாயத்தில் முதலீடு செய்தால் மட்டுமே உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற நோக்குடன் இப்படி செய்யப்படுகிறது. இவ்வாண்டு, அதாவது 2024ஆம் ஆண்டு ‘நல்லதொரு வாழ்வுக்கும் நல்லதொரு வருங்காலத்துக்கும் உணவுக்கான உரிமையைக் கொண்டிருத்தல்’ என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். கடந்த 2023ஆம் ஆண்டில் 733 மில்லியன் மக்கள் அதாவது 11 பேரில் ஒருவர் பட்டினியால் உயிரிழப்பதாக தெரியவந்தது.
2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகளவில் 5 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகளில் ஒன்று வளர்ச்சி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு ஆபிரிக்காவில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2021ஆம் ஆண்டில் உலகில் 76.8 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கண்டறியப்பட்டனர்.
மேலும், இன்றைய காலத்தில் பல நாடுகளில் போர் நடைபெறுகிறது. இதன்போது போர் மற்றும் மோதலுக்கான ஆயுதமாக பசியைப் பயன்படுத்துவதை பார்க்கின்றோம்.
இவ்வாறு உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பல நாடுகளில் பட்டினி என்பதே தலையாய பிரச்சினையாக உள்ளது.
தற்போது உலக மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. 2050ஆம் ஆண்டில் 9.6 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய, உணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டியது அவசியம். ஆனால், மறுபுறம் பருவநிலை மாற்றத்தாலும் மாறிவரும் காலநிலையாலும் அதிக வெப்பநிலையாலும் விவசாயம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், பசியால் துயருறும் மக்களின் எண்ணிக்கை 15 கோடியே 20 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகில் 13 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் பஞ்சத்தில் அல்லது பஞ்சத்தை ஒத்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். உலகில் இறக்கும் குழந்தைகளுள் பாதி பேர் சத்துணவின்மையால் உயிரிழக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் பசி தொடர்புடையவற்றால் உயிரிழக்கும் 90 இலட்சம் பேரில் பெரும்பான்மையானோர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள். ஏழ்மையும் பசியும் ஆபிரிக்காவில்தான் தங்கள் வசிப்பிடத்தை அதிகளவில் கொண்டுள்ளன. அத்துடன் இயற்கை பேரழிவுகள் இன்றைய காலத்தில் அதிகமாக ஏற்படுகின்றன. எனவே, இன்றைய காலகட்டத்தில் நிலையான விவசாயத்துடன் ஆரோக்கியமான உணவும் அனைவருக்கும் கிடைக்க நிரந்தர வழியைக் கண்டறிய வேண்டியது அவசியம்.
இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியால் அவதிப்படும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால், நாம் அனைவரும் இதில் விழிப்புணர்வு அடைகின்றோமோ என்பது கேள்விக்குறியே.
உலக மக்களை பசிக்கொடுமையில் இருந்து ஒரே நாளில் மீட்டுவிட முடியாது. ஆனால், முடிந்த வரை ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க முடியும். முதலில் தாங்கள் உண்ணும் உணவை வீணாக்குவதைத் தவிர்க்கலாம். ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அதை வீண் செய்யக்கூடாது என உறுதியாக இருக்கலாம்.
வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள். அதுமட்டுமன்றி, நாம் உண்ட உணவு போக மீதமான உணவை குப்பையில் கொட்டாமல் பசியால் தவிக்கும் மக்களுக்கு அளிக்கலாம். தேவைக்கு மட்டும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினால், உணவை வீணாக்குவதையும், பசியுடன் படுக்கைக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம்.
உலகில் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நம்மால் இயன்றதை ஆற்றுவோம். அதற்கு மனதளவில் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும். நாம் வாழ்வதற்கு அடிப்படையான இந்த உணவின்றி ஓர் உயிர் மடிதல் மாபெரும் கொடுமை. எம்மால் முடிந்தளவு அதை தடுக்க இந்நாளிலிருந்தேனும் முயற்சிப்போம்.
நன்றி வீரகேசரி