ஹரியானாவில் 13 அமைச்சர்களுடன் முதல்வராக சைனி பதவியேற்பு
18 ஐப்பசி 2024 வெள்ளி 05:01 | பார்வைகள் : 1474
ஹரியானா முதல்வராக, பா.ஜ.,வின் நயாப் சிங் சைனி, 54, இரண்டாவது முறையாக நேற்று பதவி ஏற்றார். அவருடன் இரு பெண்கள் உட்பட 13 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஹரியானா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., 48 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. ஹிசார் எம்.எல்.ஏ., சாவித்திரி ஜிண்டால் உட்பட மூன்று சுயேச்சைகள் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்றால், நயாப் சிங் சைனி முதல்வராக தொடர்வார் என, பா.ஜ., தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, பா.ஜ., சட்டசபை தலைவராக நயாப் சிங் சைனி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தசரா மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சைனிக்கும், அமைச்சர்களுக்கும் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டசபையில், முதல்வரையும் சேர்த்து 14 பேர் அமைச்சர்களாக பதவி வகிக்கலாம்.
விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நட்டா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றனர். பதவி ஏற்ற பின், முதல்வர் சைனி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மோடி அரசின் கொள்கைகள் மீது ஹரியானா மக்கள் நம்பிக்கை வைத்து மீண்டும் வெற்றி பெற செய்துள்ளனர். கடந்த 2014, 2019ல் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினோம். இந்த முறை அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு சைனி கூறினார்.